Published : 17 Mar 2021 01:42 PM
Last Updated : 17 Mar 2021 01:42 PM

சிஏஏ எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது: சி.டி.ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அமைச்சர் ஜெயக்குமார் - சி.டி.ரவி: கோப்புப்படம்

சென்னை

சிஏஏ எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு இப்போது தேர்தலுக்காகச் சொல்லப்பட்டிருக்கிறதா? அதை ஏன் முன்பு அறிவிக்கவில்லை?

பெட்ரோல் - டீசல் விலை சர்வதேச விவகாரம் என்பதால் ஏற்ற இறக்கம் இருக்கும்.

வாட் வரியை மாநில அரசுதானே விதிக்கிறது?

வாட் வரி என்பது மாநிலத்தின் வரி வருவாய். மாநில அரசுக்கு வரி வருவாய் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், மக்களுக்குப் பாதகமில்லாமல் பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்க எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். இப்போது காபந்து அரசாக இருப்பதால் செய்ய முடியவில்லை.

சிஏஏ முக்கியத்துவத்தை அதிமுகவுக்குப் புரியவைப்போம் என பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளாரே?

சிறுபான்மையின மக்களைப் பாதிக்கும் எந்தக் கொள்கையிலும் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். கட்சியைப் பொறுத்தவரைக்கும் கூட்டணி இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். கொள்கை வேறு, கூட்டணி வேறு. சிஏஏ எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

சிஏஏவுக்கு மாநிலங்களவையில் ஏன் வாக்களித்தீர்கள்?

ஒரு முடிவு அன்றைய தினம் எடுக்கப்பட்டது. இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வாக்களிக்காவிட்டாலும் மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பலம் இருப்பதால் சட்டமாக நிறைவேறியிருக்கும், இன்றைக்கு எடுக்கப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் அதிமுக உறுதியாக இருக்கும். சிறுபான்மையின மக்களின் உரிமைகளை அதிமுக பாதுகாக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x