Published : 17 Mar 2021 01:44 PM
Last Updated : 17 Mar 2021 01:44 PM
காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா இன்று (மார்ச் 17) சுயேட்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த பி.ஆர்.சிவா, கடந்த 2006 சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமி ஆட்சிக்காலத்தின் நிறைவின்போது சுமார் 7 மாதங்கள் பி.ஆர்.சிவா அமைச்சராக பதவி வகித்தார். 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் திருநள்ளாறு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட பி.ஆர்.சிவா திட்டமிட்டிருந்தார். மக்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில், தாம் போட்டியிடும் வகையில் அத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என இறுதி வரை பி.ஆர்.சிவா நம்பிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைத்து, அவரையே திருநள்ளாறு தொகுதி வேட்பாளராக அக்கட்சி நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பி.ஆர்.சிவா சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து இன்று காலை காரைக்கால் நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சுபாஷிடம் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “ என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்டிருந்தேன். ஆனால் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியுள்ளனர். அதில் திருப்தி இல்லை. அதனால் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. அதனால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
திருநள்ளாறு தொகுதியின் தற்போதையை எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT