

தனது கட்சித் தொண்டர்களை நம்பாமல் பண மூட்டைகளை மட்டுமே நம்பி ஒரு கூட்டணி போட்டியிடுகிறது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன. அமமுகவுடன் தேமுதிக இணைந்து புதுக் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், மதுரவாயல், மாதவரம், பொன்னேரி ஆகிய தொகுதிகளில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் ஒரு துரோகக் கூட்டணி உள்ளது. அங்கு யாரை நம்பித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மக்களையும் நம்புவதில்லை. நிர்வாகிகளையும் ஏன் தொண்டர்களையும் நம்புவதில்லை. பண மூட்டைகளை மட்டுமே நம்பி அந்தக் கூட்டணி இருக்கிறது.
இன்னொரு கூட்டணியும் உங்களுக்குத் தெரியும். அது தீய சக்திக் கூட்டணி. தப்பித் தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதைத் தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனெனில் திமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் தமிழகத்துக்கு அத்தனை தீங்குகளும் நடைபெற்றன.
கச்சத்தீவு பிரச்சினை, காவிரி நீர் விவகாரம் ஏன் நீட் தேர்வு பிரச்சினை வரை அனைத்துக்கும் காரணமானவர்கள் திமுகவினர்தான். அவர்களே இந்தத் திட்டங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.