Published : 17 Mar 2021 10:37 AM
Last Updated : 17 Mar 2021 10:37 AM
காங்கிரஸ் கதர் அரசியலும், பாஜக காவி அரசியலும் செய்கின்றன என புதுச்சேரியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் சீமான் பேசியுள்ளார்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்றது.
இதில், மாநிலம் முழுவதும் போட்டியிடும் 28 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘‘நாங்கள் இனவெறி அரசியல் செய்யவில்லை. இன உரிமை அரசியல் செய்கிறோம். எங்களை எதிர்ப்பவர்கள்தான் இனவெறி அரசியல் செய்கின்றனர். மாட்டுக்கும் உயிர் தந்த நீதி தவறாத மக்கள் நாங்கள். ஜனநாயக தமிழகத்தில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் எதிர்த்துப் பேச முடியாமல் வெளிநடப்பு செய்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் உங்கள் மகன் அமர்ந்து பேசும்போது, நான் யார் என்பது தெரியும்" என்று பேசினார்.
ஸ்டாலின் மீது விமர்சனம்:
"தமிழகத்தில் ஆகப்பெரும் சிந்தைனையாளன் தொடங்கிய இயக்கம், பேரறிஞர் தொடங்கிய கட்சி கடைசியில் யாரிடம் சிக்கிக்கொண்டு தத்தளிக்கிறது பாருங்கள். மோசமான மூடநம்பிக்கை என்பது பார்த்துப் படிக்கும்போது பல தவறுகள் செய்த ஒருவர் நல்லாட்சி தருவார் என்று நம்புவதுதான்" என்று கூறியதோடு பாடல் ஒன்றைப் பாடி ஸ்டாலினை சீமான் விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
''பேரறிஞர்கள், பெருமக்கள் வாழ்ந்த மண்ணில் நாங்கள் பிறந்து இறந்து கொண்டிருக்கிறோம். மற்ற இனங்களுக்கு எப்போதாவது போராட்டம் வரும், தமிழ் தேசிய இன மக்களுக்கு போராட்டம்தான் வாழ்க்கையாக மாறிவிட்டது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழப் போராடித்தான் பெற்றாக வேண்டும்.
மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காத கட்சிகள் காங்கிரஸ், பாஜக. தமிழகம், புதுச்சேரியில் பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். காங்கிரஸ், பாஜக என் இனத்துக்கு எதற்கு? என் இனத்தின் வளத்தையும், உரிமையையும் மீட்க நின்றுள்ளார்களா?
பாஜக மத்தியில் இவ்வளவு வலிமையோடு இருக்கக் காரணம் காங்கிரஸ். சகிக்க முடியாத ஊழலைச் செய்ததே. மதவாதத்துக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று நம்பிக்கொண்டிக்கின்றனர். ஆனால் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒன்றுதான். தனியார்மயம், தாராளமயம், உலக மயம் எல்லோமே அவர்களுக்கு ஒன்றுதான்.
வெளியுறவுக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்ட அனைத்துமே இவ்விரு கட்சிகளுக்கும் ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி கதர் அரசியல் செய்கிறது. பாஜக காவி அரசியல் நடத்துகிறது.
நீட், ஜிஎஸ்டி, சிஏஏ உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ், அதனைச் செயல்படுத்தியது பாஜக. இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம். 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமானவர்களின் பிரச்சினை. மீனவன், மாணவன், விவசாயிகள் பிரச்சினைகளை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நீ எதற்குதான் வருவாய். காங்கிரஸ், பாஜகவை எத்தனை நாட்கள் நம்பி ஏமாறுவீர்கள்?
காங்கிரஸ், பாஜக கட்சிகளிடம் என்ன வித்தியாசத்தைக் கண்டோம். இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும். பேராபத்தை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பே நான் சொன்னேன் இந்தியா இப்போது விற்பனைக்கு என்று. இரண்டு கட்சிகளும் ஏலம் விட்டுவிட்டனர். மாநில முதல்வர்கள் ‘‘அனைத்திந்திய தரகர்களாகவும்’’ பிரதமர் ‘‘சர்வதேச தரகராகவும்’’ நம் நாட்டை உலக நாடுகளின் அடிமையாக்குவதுதான் இவர்களின் பொருளாதாரக் கொள்கை.
பொருளாதாரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்க முடியுமே தவிர, தலைவனாக இருந்து நாட்டில் உள்ளவர்களுக்கு சேவை செய்ய முடியாது.
பசுமைப் பொருளாதாரத்தில் மட்டுமே நாட்டையும், பொருளாதாரத்தையும் வாழ வைக்க முடியும். இந்த 5 ஆண்டுகளில் அதானி இந்தியா, அம்பானி இந்தியா என்று வந்துவிடும். தமிழகம், புதுச்சேரி அரசுகள் மக்களைப் படிக்க வைக்காமல், குடிக்க வைக்கிறது. அரசியல்வாதிகளிடம் உள்ள பணத்தில் 50 ஆண்டுகள் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.
புதுச்சேரியில் கிரண்பேடியை அனுப்பி நாராயணசாமியைப் பாடாய்ப்படுத்திவிட்டனர். எங்களைப் போன்றோர் உட்கார்ந்திருந்தால் என்ன நடத்திருக்கும் தெரியுமா?
புதுச்சேரியில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றத் தரவில்லை? மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். மாநில உரிமையை மறுக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களை நம்பித்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்.
நாடும், மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆள வேண்டும். பலரின் ஆட்சியில் வாழ்ந்துவிட்டீர்கள், எங்களுடைய ஆட்சியில் ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்''.
இவ்வாறு சீமான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT