Published : 17 Mar 2021 08:54 AM
Last Updated : 17 Mar 2021 08:54 AM
தமிழகத்தில், இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது என்று, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நேற்றிரவு (மார்ச் 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
"தமிழகத்தில் ஏழ்மை தலைவிரித்தாடுகிறது. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இரு கட்சிகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்ற கூற்று இனி செல்லாது. அதற்காக மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது.
தமிழகம் குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டது. இதற்காக குரங்குகள் கோபித்துக் கொள்ளக்கூடாது. பூமாலை மீதுள்ள கரிசனத்தில் சொல்கிறேன்.
ஆண்டு கொண்டிருந்த அரசு இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், என் சொத்து மதிப்பு ரூ.200 கோடியைத் தாண்டியிருக்கும். என்னைத் தொழில் செய்யவிடாமல் தடுத்து, ஆளும் கட்சியினர் இழப்பை ஏற்படுத்தினார்கள்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதில் 33 சதவிகிதம் பேர் குற்றவாளிகளாக உள்ளனர். கட்டப்பட்டு வரும் பாலங்களைப் பார்த்தேன். பாலம் என்று வரும்போது, இவர்கள் கண்களில் லாபம் என்று தெரிகிறது.
வருமான வரி கட்டாமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு 300 கோடியைத் தாண்டியிருக்கும். நேர்மையாக இருப்பது கஷ்டமல்ல, பொய் பேசுவதுதான் சிரமம். அறிவிக்கும் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவேன் என்கிறார்கள். மக்கள் பணத்தைக் களவாடாமல் இருந்தாலே நாங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
வேட்பாளர்கள் மக்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு, வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டும். மநீம வேட்பாளர்கள் போலியான வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது. எங்கள் வேட்பாளர்கள் அதைப் பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட வேண்டும். அதில் நானும் உத்தரவாதக் கையெழுத்து போடுவேன். முதல்வர் இப்படிக் கையெழுத்திடத் தயாரா? கொடுத்திருந்தால் இவரும் சிறைக்குச் சென்றிருப்பார்.
சேவை செய்திருக்கிறேன், வாய்ப்பு கொடுங்கள் என்று என்னிடம் வந்தவர்கள்தான் இப்போது எங்கள் வேட்பாளர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்வேன் என்று கூறுபவர்கள் அல்ல.
பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு. நான் உழைத்து, அரசியல் செய்வதற்காக நேர்மையாக சம்பாதிக்கிறேன். கொள்ளையடிப்பது, கொலை செய்வதுதான் தவறு.
இருவரில் ஒருவர்தான் என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கலாம்; ஆனால், அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். பேருந்தைக் கொளுத்தியதும், அண்ணன் - தம்பி பிரச்சினைக்காக, பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியதையும் அறிவேன்.
சாதி, மதம் பார்த்து வாக்களிக்காதீர். சாதிப்பவனைப் பார்த்து வாக்களியுங்கள். நாங்களும் இலவசம் தருவோம். அது, தரமான கல்வி, தரமான குடிநீர், சட்டமும் ஒழுங்கும் லஞ்சமின்றி இலவசமாக வழங்கப்படும். குடிக்கத் தண்ணீர் இல்லை என்று கேட்டால், வாஷிங் மெஷின் தருகிறோம் என்கிறார்கள்.
என்னுடைய அரசியலும் குடும்ப அரசியல்தான். மநீம தொண்டர்களே என் குடும்பம். என்னை அவமானப்படுத்தினால் கூட நான் போகமாட்டேன். நல்லவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையெல்லாம் கெட்டவர்களுக்குக் கிடைக்கிறது என்று 'மகாநதி' படத்தில் நாயகன் பேசியதுபோலப் பேசிவிட்டு, குற்றத்தின் பக்கம் போய்விடாதீர்கள்.
ஆட்சியில் இருக்கும் விஷப்பாம்பின் தலை போய்விட்டது, இப்போது வால் ஆடிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பாம்புக்குத் தலை இருக்கிறது. அது இன்னும் ஆபத்து.
மூன்றாவது அணி வென்றதில்லை என்கிறார்கள். கணக்குக் கேட்டு வெளியே வந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவே மூன்றாவது அணிதான். என் தொகுதியை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவுக்கே முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.
கோவிட் காலத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராதீர். கூட்டம் குறைந்தாலும் பரவாயில்லை. வெற்றிதான் நமது இலக்கு".
இவ்வாறு கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT