Published : 17 Mar 2021 08:37 AM
Last Updated : 17 Mar 2021 08:37 AM
‘தமிழகத்தில் திமுக 234 இடங்களிலும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத ஆட்சியை அமைக்கவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,’ என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் மற்றும் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்செல்வனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கெஜல்நாயக்கன்பட்டியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல், நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் மட்டுமல்ல, முதல்வர் பழனிசாமிக்கு கடைசி தேர்தலாகவும், அரசியலை விட்டு ஓட வைக்கும் தேர்தலாகும். வாய்க்கு வந்தபடி பேசி வரும் முதல்வர் பழனிசாமி, தன்னை முதல்வராக்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று பொய் உரைத்து வருகிறார். ஜெயலலிதாவால் அவர் கட்சி பொறுப்புகளை பெற்று இருக்கலாம், எம்எல்ஏ, அமைச்சராகியிருக்கலாமே தவிர, சசிகலா காலில் விழுந்து தான் முதல்வரானார் என்பதை சமூக வளைதளங்கள் உலகளவில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போதும், உடல் நிலை நலிவுற்ற இருந்த போதும், அவரால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான் தவிர பழனிசாமி அல்ல. அப்படியிருக்க சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்த பழனிசாமி, அவருக்கே விசுவாசமாக இல்லாத போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எவ்வாறு விசுவாசமாக இருந்திருக்க முடியும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் யாராலும் இதுவரை அறிந்து கொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ், 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் இருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வரவில்லை. ஆணையம் அமைக்க வலியுறுத்திய ஓபிஎஸ் ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஆனால், முதல்வர் பழனிசாமி புது கரடி விடுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் தான் காரணம் என்று. அப்படியே வாதத்துக்கு இருந்தாலும், நான்கு ஆண்டுகளாக என்னை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க நான் தயாராகவே இருக்கிறேன். இந்த சவாலை முதல்வர் பழனிசாமி ஏற்க தயாராக உள்ளாரா.
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் குழுவுக்கு இலவச விலைபேசி வழங்குவோம் என்றனர் அளித்தார்களா, இல்லவே இல்லை. திமுக தேர்தல் அறிக்கையை நகல் எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. தமிழகத்துக்குள் நீட் தேர்வை வர விடாமல் மறைந்த முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தடுத்தனர். ஆனால், முதல்வர் பழனிசாமி பதவிக்கு வந்ததும், மத்திய அரசுக்கு அஞ்சி, அடிபணிந்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்து, 13 அப்பாவி மாணவ, மாணவியர்கள் உயிரிழந்த சம்பவம் தான் நடந்தது.
தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ‘இந்து’ ராம் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அவர் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும், அதிமுக தோல்வியை தழுவும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல, வடமாநிலத்தில் பிரபலமான ஏபிபி சி-வோட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தலில் திமுக 43 சதவீத ஓட்டுகளையும், அதிமுக 30 சதவீத ஓட்டுகளை பெறும் என தெரிவித்துள்ளது. நான் கூட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தான் பிடிக்கும் என்று கூறியிருந்தேன். தற்போதைய நிலையில் தமிழகத்தில் திமுக 234 இடங்களிலும் வெற்றி பெற்று, எதிர்கட்சியே இல்லாத ஆட்சியை அமைக்கவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வீரபாண்டியார் மன்னில் இருந்து அவரின் தம்பியாகவும், கருணாநிதியின் மகனாகவும், உங்களில் ஒருவனாக இருந்து, திமுக வேட்பாளர்களை அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT