Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

கொளத்தூரில் ஹாட்ரிக் சாதனை படைப்பாரா மு.க.ஸ்டாலின்?

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்த வில்லிவாக்கம் தொகுதியைப் பிரித்து கடந்த 2008-ல் உருவாக்கப்பட்டதுதான் கொளத்தூர் தொகுதி. 2006 பேரவைத் தேர்தல் வரை இருந்த புரசைவாக்கம் தொகுதியின் சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரம்பூர் ரயில் நிலையத்தை தாண்டி பேப்பர் மில்ஸ் சாலையில் தொடங்கும் கொளத்தூர் தொகுதி, ரெட்டேரி சந்திப்பை தாண்டி விநாயகபுரம் பகுதிவரை நீள்கிறது. கொளத்தூர், பெரவள்ளூர், செந்தில் நகர், சீனிவாச நகர்,அயனாவரம், பெரியார் நகர், பூம்புகார் நகர், ஜவகர் நகர், செம்பியம் ஆகியபகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கொளத்தூர் அமைந்துள்ளது. சென்னை உள்வட்டச் சாலை கொளத்தூர் தொகுதி வழியாகச் செல்வதால் போக்குவரத்து எளிதாகியுள்ளது. இதனால் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் வட சென்னையில், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக கொளத்தூர் உள்ளது.

கொளத்தூர் தொகுதியின் பூர்வகுடிகளாக நாயுடு, வெள்ளாளர், முதலியார், தலித்கள் குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினர் உள்ளனர். ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளில் உருவான நகரப் பகுதிகள் என்பதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இத்தொகுதியில் உள்ளனர்.

ஆண்டுதோறும் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்வோர் ஆயிரக்கணக்கில் உள்ள தொகுதி. கிறிஸ்தவர்கள் குறிப்பாக இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான அலங்கார மீன் வளர்ப்பு கடைகளும், மொத்த விற்பனையகங்களும் உள்ளன. தமிழகம் முழுவதற்கும் இங்கிருந்து தான் அலங்கார மீன்களும், அது சார்ந்த பொருள்களும் செல்கின்றன. டைல்ஸ், மார்பிள் கற்கள் விற்கும் கடைகளும் அதிகமாக உள்ளன.

2006 பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வென்றார். இதனால், 2011 தேர்தலில் புதிதாக உருவான கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தார். அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் கொளத்தூரை ஸ்டாலின் தேர்வு செய்ததாக திமுகவினர் காரணம் சொன்னார்கள். அந்த அளவுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அதிக அளவில் கொளத்தூர் தொகுதியில் வசிக்கின்றனர்.

உயர் நடுத்தர மக்கள் கணிசமாக இருந்தாலும் கொளத்தூரில் நடுத்தர மக்களே அதிகம். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை அடுக்குமாடி குடியிருப்புகள் அதுவும் சிறிய, சிறிய அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இவர்களை குறிவைத்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.

மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு, கோடை காலங்களில் குடிநீர் பிரச்சினை. இதுதான் கொளத்தூரின் பிரதானப் பிரச்சினை. கோடையில் நிலத்தடி நீர் வறண்டு விடுவதால் கொளத்தூர் தொகுதி மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல், கொசுத்தொல்லை என வட சென்னைக்கே உரித்தான பிரச்சினைகள் இங்கும் உண்டு. வட சென்னையின் அடையாளமாக இருந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) இத்தொகுதிக்குள்தான் இருக்கிறது.

கொளத்தூர் தொகுதி உருவான பிறகு 2011-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே இங்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பேசப்படும் நட்சத்திர தொகுதியானது. 2011-ல் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட சைதை துரைசாமி, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். ஆனாலும் வெற்றிக்கனி ஸ்டாலின் வசமானது. மு.க.ஸ்டாலின் 68 ஆயிரத்து 677 வாக்குகளும், சைதை துரைசாமி 65 ஆயிரத்து 943 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் 4 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

2011-ல் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாலும் 2016 தேர்தலில் மீண்டும் கொளத்தூரிலேயே ஸ்டாலின் போட்டியிட்டார். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே, தொகுதி முழுவதும் 'பேசலாம் வாங்க' என்ற தலைப்பில் தொகுதி மக்களுடன் கலந்துரையாடினார். ஸ்டாலின் மட்டுமல்லாது அவரது மனைவி துர்காவும் தீவிர பிரசாரம் செய்தார். அதற்கு பெரும் பலன் கிடைக்கவே செய்தது. 2011-ல் வெறும் 2 ஆயிரத்து 734 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின், 2016-ல் 91 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனை 37 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 5,289, பாமக 3,011, நாம் தமிழர் கட்சி 2,820 வாக்குகளை பெற்றன.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது முறையாக நட்சத்திர தொகுதி அந்தஸ்தை கொளத்தூர் பெற்றுள்ளது. திமுகவின் முதல்வர் வேட்பாளராகவும் ஸ்டாலின் இருப்பதால் இந்த முறை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கொளத்தூர் தொகுதியில் 1,38,181 ஆண்கள், 1,44,050 பெண்கள், இதர வாக்காளர்கள் 68 பேர் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 299 வாக்காளர்கள் உள்ளனர்.

மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதி ராஜாராம் போட்டியிடுகிறார். இதுதவிர, ஏ.ஜெகதீஷ் (மக்கள் நீதி மய்யம்), ஜெ.ஆறுமுகம் (அமமுக), பெ.கெமில்ஸ் செல்வா (நாம் தமிழர்) உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

கடந்த 2 தேர்தல்களைப் போலவே இந்த முறையும் முடிவு வரும் என்று கூறப்பட்டாலும், ஸ்டாலினை தோற்கடிப்பேன் என்று அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இதனால் ஸ்டாலின் ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x