Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

தாம்பூலத் தட்டில் அழைப்பிதழை வைத்து திருவள்ளூரில் வாக்காளர்களுக்கு அழைப்பு: வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியர் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பூலத் தட்டில் அழைப்பிதழ் வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு தாம்பூலத் தட்டில் அழைப்பிதழ் வைத்து அழைப்பு விடுக்கும் பணியை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வசதியாக, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தேர்தலில் வாக்களிக்க, தாம்பூலத் தட்டில் அழைப்பிதழை வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியை நேற்று திருவள்ளூர்- பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

இப்பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் வள்ளலார் தெருவில் உள்ள வீடுகளில் ’வாக்களிக்கும் வைபோகம் - கண்ணியத்துடன் வாக்களிக்க வாருங்கள்’ என்ற பொருள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அழைப்பிதழ்களை தாம்பூலத் தட்டுகளில் வைத்து, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இத்தகைய வாக்காளர் விழிப்புணர்வு பணி மாவட்டத் தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளிடத்தில் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்ட இரு சக்கர வாகனப் பேரணி, ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, சி.வி.நாயுடு சாலை வழியாக பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.

இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x