Published : 16 Mar 2021 06:05 PM
Last Updated : 16 Mar 2021 06:05 PM
புதுச்சேரியில் எதிரணிக்கு செல்வதை தடுக்க, யார் வேட்பாளர் என்பதை இறுதியில் அறிவிக்கும் ரங்கசாமி பார்முலாவை முழுமையாக இம்முறை முக்கிய அரசியல்கட்சிகள் காப்பியடித்துள்ளதால் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறிய ஊரான புதுச்சேரியில் அரசியல் எப்போதும் வித்தியாசம்தான். அதிலும் தேர்தல் வந்தாலே யார் எக்கட்சியில் இருப்பார்கள் என்பதை கணிப்பதே ஒரு கலை. காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி கடந்த 2011ல் என்ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தார்.
அப்போது என்ஆர்.காங்கிரசும், அதிமுகவும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி இறுதிவரை இழுபறியாக சென்றது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகு அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் பலரும் மனுதாக்கல் செய்தனர். அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குதான் இறுதியில் கட்சி சார்ந்த படிவம் தரப்பட்டு, தேர்தலை சந்தித்து ரங்கசாமி வெற்றியும் பெற்றார். இது ரங்கசாமியின் பார்முலாவாக பார்க்க தொடங்கினர்.
தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்கள் வேட்பாளராகவிட்டால், அதிருப்தியடைந்து எதிரணிக்கு செல்லும் வாய்ப்பை தடுப்பதற்காக ரங்கசாமி இந்த பார்முலாவை கையாண்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுவார்கள்.
இதேபோல 2011ல் கதிர்காமம், இந்திராநகர் என 2 தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி தேர்தலுக்கு பின் இந்திராநகர் தொகுதியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் ஜெயபால்தான் போட்டியிடுவார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் வேட்புமனு தாக்கலின் இறுதிநாளில் தனது அண்ணன் மகன் தமிழ்செல்வனை நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். பின்னர் கூட்டணி அமைத்த அதிமுகவை கழற்றி விட்டு, ஜெயலலிதாவை சந்திக்காமல் புதுச்சேரியில் முதல்வரானார்.
அதைத்தொடர்ந்து 2016 தேர்தலில் என்ஆர்.காங்கிரசும். அதிமுகவும் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கூட்டணி அமையாமல் தனித்து போட்டியிடும் நிலை உருவானது. அப்போதும் இதே முறையை பின்பற்றி, இறுதியில் வேட்பாளர் இறுதிபட்டியலை வெளியிடும்போதுதான் யார் வேட்பாளர் என்ற விபரமே தெரியவந்தது.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் பலரும் கட்சி மாறத்தொடங்கினர். இதனால் குழப்பம் ஏற்பட தொடங்கியது. தொகுதி பங்கீடு உட்பட பல விசயங்களில் கட்சிகளில் குழப்பம் அதிகரித்தே வருகிறது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. இதர கட்சிகளான காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகியவை என்.ஆர்.காங்கிரஸான ரங்கசாமி பார்முலாவை பின்பற்ற தொடங்கியுள்ளன.
திமுக மட்டுமே 13 தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எதிரணியான பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றிலும் போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வரை அறிவிக்கப்படவில்லை. தாங்கள்தான் வேட்பாளர்கள் என பலரும், கூட்டணியிலுள்ள கட்சியினரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ரங்கசாமி பார்முலாவை முழுமையாக முக்கிய அரசியல் கட்சிகள் கட்சிகள் காப்பியடிப்பதால் உச்சக்கட்ட குழப்பத்திலுள்ளது புதுச்சேரி அரசியல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT