Published : 16 Mar 2021 06:01 PM
Last Updated : 16 Mar 2021 06:01 PM
திமுக என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து இன்று (மார்ச் 16) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. ஆனால், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று போகும் இடமெல்லாம் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
ஜெயலலிதா முதல்வராக இருக்கின்றபோதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையை ஏற்று அந்த மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். அதை யாரும் மறைக்க முடியாது.
அதேபோல, சென்னைக்கு அடுத்து புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனையும் நிறைவேற்றி தந்த அரசு தமிழக அரசு. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரைத் தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறோம். சிறப்பான சாலை வசதிகளைக் கொடுத்திருக்கிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை இங்குள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றிடும் வகையில், காவிரி - குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்த அரசு தமிழக அரசு. இத்திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம் செழிக்க, வளம் பெற ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் திட்டத்தைத் தீட்டி, குன்னத்தூர் ஊராட்சியில் நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினேன். இத்திட்டம் மூன்றாண்டுகளில் நிறைவேற்றும்போது, இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயிகளுக்குத் தேவையான நீரும், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரும் தடையின்றி கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தின் வறண்ட பகுதிகள் அனைத்தும் செழிப்பாக மாறும். இதுபோன்ற திட்டம் திமுக ஆட்சியில் வந்ததா?
புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்த அரசாங்கம் தமிழக அரசாங்கம்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் தங்களது பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கோரிக்கையை ஏற்று வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். உண்மையைப் பேசுகின்ற கட்சி அதிமுக கட்சி. மக்களுக்குச் சேவை செய்கின்ற இயக்கம் அதிமுக இயக்கம்.
அதிமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் மகளிர் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லாக் குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். மாதந்தோறும் எல்லாக் குடும்பங்களுக்கும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஏழை மக்களுக்கு அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
கிராமத்தில் நிலமின்றி வாழ்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆதி திராவிட மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட வீடுகள் பழுதடைந்திருந்தால் அவர்களுக்கும் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கேபிள் டிவி இணைப்புக்கு இனி கட்டணம் கிடையாது. பாரத் நெட் மூலம் தமிழகத்திலுள்ள 17 ஆயிரத்து 662 வருவாய் கிராமங்களுக்கு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இவர் எடப்பாடியிலிருந்து வந்திருக்கிறார். இவருக்கு ஒன்றும் தெரியாது என்றும், இந்த ஆட்சி 1 மாதத்தில் போய்விடும், 3 மாதங்களில் போய்விடும், 6 மாதங்களில் போய்விடும் என்றும் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடைய தலைமையில் தமிழக அரசு 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி, அவருக்கும் ஒன்றும் தெரியாது, அவரை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். விவசாயியை ஒரு நாளும் ஏமாற்ற முடியாது. உழைக்கப் பிறந்தவன் விவசாயி. ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைப்பவன் விவசாயி. உழைப்பு என்னிடத்திலே இருக்கிறது, நேர்மை என்னிடத்திலே இருக்கின்றது, விசுவாசம் என்னிடத்திலே இருக்கிறது. நாங்கள் ஏற்றம் பெறுவோம். நீங்கள் இன்னும் கீழே பாதாளத்தில்தான் போவீர்கள்.
நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிட்டார். அதனை ஏற்று நாங்கள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தபோது, சட்டப்பேரவையில் திமுகவினர் செய்த அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல.
மக்களுக்கு நன்மைகளைச் செய்ய திட்டங்களைப் போடுகின்ற அந்தப் புனிதமான மாமன்றத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் மேஜைகளின் மீது ஏறி திமுக உறுப்பினர்கள் நடனம் ஆடினார்கள். சட்டப்பேரவை சபாநாயகரைத் தள்ளிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அதற்குப் பிறகு ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியில் வருகிறார். சட்டப்பேரவையிலே இவ்வளவு அராஜகம் செய்யும் திமுகவினர் வெளியில் என்ன அராஜகம் செய்வார்கள் என்றும் இப்படிப்பட்டவர்களின் கைகளில் நாட்டைக் கொடுத்தால் என்னவாகும் என்றும் எண்ணிப் பாருங்கள்.
திமுக என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி. ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். பெரம்பலூரில் திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் தாக்குகிறார். திருமயத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணியிடம் இலவசமாய் தேங்காய் கேட்டு சண்டை போட்ட கட்சி திமுக. இப்படிப்பட்ட அராஜக கட்சியான திமுகவை வருகின்ற தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.
அதிமுக அரசுதான் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்துப் போட்டு, அமர்ந்துகொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது மக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை. மக்களின் குறைகளைக் கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை. தற்போது ஆட்சியில் இல்லாதபோது மக்களிடம் மனுக்களை வாங்கி, அதை பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் பெட்டியைத் திறந்து, 100 நாட்களில் மனுக்களுக்குத் தீர்வு காண்பாராம். எப்படிக் கதை விடுகிறார் பாருங்கள். எவ்வளவு ஏமாற்று வேலை.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார், அமைச்சராக இருந்தார், அப்போது எல்லாம் மக்களைப் போய் சந்தித்தாரா, மக்களின் குறைகளைக் கேட்டாரா? ஆட்சியில் இருக்கின்றபோது மக்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது மக்களைச் சந்தித்து மனு வாங்குகிறாராம். அந்தப் பெட்டிக்கும் நாங்கள் பூட்டு போட்டுவிட்டோம்.
நான் ஏற்கெனவே சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தவாறு, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தினோம். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி அம்மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 77 ஆயிரத்து 638 மனுக்கள் வாங்கப்பட்டன. அதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 812 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கு உரிய காரணங்களைச் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கும் தெரிவித்துள்ளோம். இப்படி மக்களைச் சந்தித்து, மனுக்களை வாங்கி, தீர்வு கண்ட அரசாங்கம் தமிழக அரசாங்கம்.
அதேபோல, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சரின் உதவி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தந்து, அதைச் செயல்படுத்திய அரசும் தமிழக அரசுதான். இதன் மூலம் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தங்கள் செல்போனில் 1100 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு, பட்டா மாறுதல், சாலை வசதி போன்ற குறைகளைச் சொன்னால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT