Published : 16 Mar 2021 03:53 PM
Last Updated : 16 Mar 2021 03:53 PM
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில கட்சியினர் பெண் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படியும் அதற்கு சன்மானமாக சில ஆயிரங்களை வழங்கி சத்தியம் செய்து தருமாறு கேட்டால், சத்தியம் மட்டும் செய்துவிடாதீர்கள் என, பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் பெண்களிடம் கேட்டுக் கொண்டார்.
பண்ருட்டித் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் போட்டியிடுகிறார். இதற்கு ஏதுவாக நேற்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று (மார்ச் 16) கூட்டணிக் கட்சி நிர்வாகள், வர்த்தக பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினரை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, கடந்த காலங்களில் தான் செய்த நலத்திட்ட உதவிகளை வேல்முருகன் சுட்டிக்காட்டினார். மேலும், "தற்போது நடைபெறவிருக்கின்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற நீங்கள் உழைக்க வேண்டும். திமுக ஆட்சியமைந்தவுடன் மகளிருக்கான திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
சில கட்சியினர் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஒரு வாக்குக்கு சில ஆயிரங்களை நிர்ணயித்து, அதோடு உங்களை நாடி வருவதோடு, அந்த சில ஆயிரங்களை உங்கள் கையில் வைத்து திணித்து, அவர்கள் கூறும் சின்னத்துக்கு வாக்களிப்பேன் என சத்தியம் செய்யுங்கள் என கேட்பார்கள்.
எனவே, எக்காரணம் கொண்டும் சத்தியம் செய்துவிடாதீர்கள் என்பதே இங்கு குழுமியிருக்கும் சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். உங்கள் பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, நிச்சயம் செய்துகொடுப்பேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT