Published : 16 Mar 2021 03:52 PM
Last Updated : 16 Mar 2021 03:52 PM
தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், முகக்கவசம் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும் என தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதைத் தடுக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
அண்மைக் காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில், மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 16,000-க்கும் அதிகமாகவும், கேரளாவில் சுமார் 2,000 நபர்களுக்கும், கர்நாடகாவில் 900-க்கும், குஜராத்தில் 800-க்கு மேலும், டெல்லியில் 400-க்கு மேலும், பஞ்சாப் மாநிலத்தில் 1400-க்கு மேலும், நோய்த் தொற்று பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாநிலத்தில் நோய்த் தொற்று ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 500 நபர்களுக்குக் கீழாக கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 சதவிகிதத்திற்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1 சதவிகிதத்திற்கு மேலாகவும் பதிவாக தொடங்கியுள்ளது. மேலும், சுமார் 65,000 RTPCR பரிசோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 800 நபர்களை தாண்டியுள்ளது.
சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4,000-க்கும் குறைவாக இருந்து, தற்போது அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து அண்மைக் காலங்களில் நாளொன்றுக்கு 5-க்கும் கீழே பதிவாகி வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு நிலவிய சூழலைவிட, இது குறைந்த அளவே இருந்தாலும்கூட, நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருதி அதை மேலும் தீவிரமாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமைச் செயலர் ஆய்வு நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய்), வருவாய் துறை ஆணையர், முதன்மைத் தேர்தல் அலுவலர், முதன்மைச் செயலாளர் (பொது), முதன்மைச் செயலாளர் (சுகாதாரம்), தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மேலாண்மை இயக்குநர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல்துறை ஆணையர், பொது சுகாதார துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் கோவிட் தொற்று நிலைமையைப் பற்றி விரிவாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் தற்போதுள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். தற்போது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவுவதற்கான காரணங்களான முகக்கவசமின்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது ஆகியன முக்கிய காரணங்களாகத் தெரியவந்துள்ளன.
மேலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாமலோ அல்லது மிக குறைவான பாதிப்புடன் வீட்டுத் தனிமைக்கான அனுமதி மருத்துவரிடம் பெற்றிருந்த போதிலும், அதனைக் கடைப்பிடிக்காத காரணத்தினால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கும் பரவும் நிகழ்வுகளும் காணப்பட்டுள்ளன.
வங்கிகள், பள்ளிகள் போன்ற இடங்களிலும், நோய் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கூட்டாக சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
தலைமைச் செயலாளரின் ஆய்விற்குப் பின்பு கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வழங்கினார்.
1. பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.
2. அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்குக் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
3. மேற்சொன்ன நெறிமுறைகள், அனைத்து இடங்களிலும் (நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.
4. கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நெறிமுறைகளாகிய மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொதுக் குழாய் இருக்கும் இடம், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாகத் தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல், போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
5. கோவிட் தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து (RTPCR) மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
6. கூட்டாக நோய்த்தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
7. காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
8. நோய்த்தொற்று உள்ள இடங்களில் நோய்த்தொற்றைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
9. தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்யவேண்டும்.
10. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கடந்த ஆண்டைப் போல் கண்காணிக்க வேண்டும்.
11. மக்கள் அதிகமாகக் கூடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கலாச்சார, வழிபாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்குப் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும். அதனைச் சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்திட வேண்டும்.
12. மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கியப் பங்காக கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்களைப் பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும்.
ஏதாவது நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்”.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT