Published : 16 Mar 2021 02:46 PM
Last Updated : 16 Mar 2021 02:46 PM
காரைக்கால் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் வாக்குப் பதிவின்போது இணையவழியில் கண்காணிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
பூவம், கோட்டுச்சேரி உள்ளிட்ட காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் காவல் சோதனைச்சாவடிகளில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (மார்ச் 16) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நெடுங்காடு அன்னவாசல் சோதனைச்சாவடி பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் மாவட்டத்தில் 29 இடங்களில் 30 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயலாற்ற வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம், மது உள்ளிட்ட பொருட்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உரிய முறையில் வாகன சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் இணைய வழியில் கண்காணிக்கப்படும்".
இவ்வாறு ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தொடர்புடைய அதிகாரிகள், போலீஸார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT