

மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொது தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சே.பா.முகம்மது கடாஃபி, தேர்தல் செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அவரை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முகம்மது கடாஃபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு இடையூறாக இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அந்த உத்தரவை ரத்து செய்யவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்தபோது, இந்த தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கும் முன், தனக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நோட்டீஸ் மனுதாரரின் ஏஜெண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.