Last Updated : 16 Mar, 2021 01:22 PM

 

Published : 16 Mar 2021 01:22 PM
Last Updated : 16 Mar 2021 01:22 PM

புதுச்சேரியில் வெளிப்படையாக அறிவிக்காமல் தொடர்ந்து மனுதாக்கல் செய்யும் வேட்பாளர்கள்; காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மவுனம்

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

வெளிப்படையாக அறிவிக்காமல் தொடர்ந்து புதுச்சேரியில் வேட்பாளர்கள் இன்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தொடர்ந்து மவுனம் காக்கின்றன. இந்நிலையில், ஏனாமில் வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய புதுச்சேரியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புறப்பட்டார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக அடங்கிய மதச்சார்பற்ற அணியும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில், காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு முடிந்து காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், கூட்டணிக்கட்சியான சிபிஐ ஒரு தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக - பாஜக கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலவுகிறது. அதிமுக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இன்று வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக வேட்பாளர்களையும் கட்சித்தலைமை அறிவிக்கவில்லை.

கட்சித்தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலேயே வேட்பாளர்கள் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்றும் (மார்ச் 16) என்.ஆர்.காங்கிரஸில் கதிர்காமம் தொகுதியில் ரமேஷ், மங்கலம் தொகுதியில் தேனி ஜெயக்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "வேட்பாளர்களையும், தொகுதிகளையும் அறிவித்தால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு கட்சிக்கு தாவுவார்கள். அதனால் ஒவ்வொரு கட்சியும் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என பல கட்சிகளும் அறிவிப்பை தள்ளி போடுகின்றன" என்று தெரிவித்தனர்.

அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மற்றொரு தொகுதியான ஏனாமில் எப்போது மனுதாக்கல் செய்வீர்கள் என்று ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "நாளை ஏனாமில் மனுதாக்கல் செய்கிறேன். அதற்காக தற்போது புறப்படுகிறேன். ஏனாமில் பிரச்சாரமும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறேன்" என்று தெரிவித்தார். வேட்பாளர்களை எப்போது முறைப்படி அறிவிப்பீர்கள் என்று கேட்தற்கு, பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x