Published : 16 Mar 2021 01:15 PM
Last Updated : 16 Mar 2021 01:15 PM

அரசு இதைப் பரிசீலிக்கலாம்; காவல்துறைக்கு இளைஞர்களைச் சேர்க்கும் புதிய நடைமுறை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் யோசனை

சென்னை

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு இதைப் பரிசீலிக்கலாம் எனும் அளவுக்கு தமிழக இளைஞர்களை விஏஓ, காவல்துறைக்குத் தேர்வு செய்யும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு ஆண்டுதோறும் 9சில ஆண்டுகளைத் தவிர) இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 9000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்காக 4 லட்சம் பேர் வரை பலவிதத் தேர்வுகளை எழுதி இறுதியில் தேர்வாகின்றனர். அதேபோன்று விஏஓ, உதவி ஆய்வாளர் தேர்வுக்கும் இளைஞர்கள் தயாராகிறார்கள்.

இன்று வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுவித நடைமுறையைத் தெரிவித்துள்ளனர், இதையும் பரிசீலிக்கலாம் எனும் அளவுக்கு அந்தத் திட்டம் உள்ளது.

இளைஞர் வேலை வாய்ப்பு குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சம்:

• திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர்கள் தமிழகத்தில் பெருமளவில் இருக்கிறார்கள். இவர்களுடைய ஆற்றலையும், ஆர்வத்தையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிற அதே வேளையில், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழிசெய்யும் வகையில், தமிழக மக்கள் முன்பு ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த காங்கிரஸ் கட்சி விழைகிறது.

• தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வருடம் ஒன்றுக்கு +2 படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள்-இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடமும் வழங்கி மூன்று ஆண்டுகளுக்குக் குடிமைப் பணிகள் பயிற்சி வழங்குவது, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து முறைப்படுத்துதல், தேசியப் பேரிடர் மீட்புப் பணிகளில் பயிற்சி, அடிப்படைக் குற்றவியல் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள், சமூக நலப் பணிகள் போன்றவற்றில் போதிய பயிற்சிகளை அளித்து, மூன்றாண்டு பயிற்சிகள் முடிந்தவுடன், அவர்களைத் தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியமர்த்துவது.

பயிற்சிக் காலங்களில் முதலாமாண்டு மாதம் ரூ.1000/- இரண்டாமாண்டு ரூ.2000/- மூன்றாமாண்டு ரூ.3000/- உதவித்தொகை வழங்குவது என்ற புதிய திட்டத்தைக் காங்கிரஸ் செயல்படுத்த விழைகிறது.

• சமயத் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணிக்கும், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிக்கும், குளம் வெட்டுதல், மரம் நடுதல், பாசன வசதிகளை மேம்படுத்துதல், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவப் பணிகள் போன்ற சமூக நலப்பணிகளுக்கு அவர்களைப் பயிற்சிக் காலங்களில் பயன்படுத்தலாம்.

இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் இளைஞர்கள் - இளம்பெண்கள், மூன்று ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் - இளம்பெண்கள் அரசின் பொதுப் பணிக்கு எப்பொழுதும் தயாராக இருப்பதுடன், நல்ல பயிற்சி பெற்ற, விவரம் தெரிந்த, அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் காவல்துறைக்குக் கிடைப்பர்.

ஏற்கெனவே, காவலர் பயிற்சிக்காக அரசிடம் இருக்கின்ற வசதிகளை விரிவுபடுத்தி, இத்திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• இந்த இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறை குறித்தும், காவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து ஆலோசனையைப் பெறலாம்.

• அதைப் போலவே, பட்டப்படிப்பு முடித்த 100 இளைஞர்களையும் - இளம்பெண்களையும் தேர்ந்தெடுத்து மூன்றாண்டுகளுக்கு அவர்களுக்கு அரசின் அனைத்துத் துறைகளிலும் சிறப்புப் பயிற்சி கொடுத்து, அதில் தேறியவர்களைக் காவல் துறையின் உதவி ஆய்வாளர்களாகவும், கிராம நிர்வாக அதிகாரிகளாகவும் பணி நியமனம் செய்யலாம்.

• பயிற்சிக் காவலர்களுக்கு, உணவு மற்றும் உறைவிடம் வழங்குவது போல், இவர்களுக்கும் வழங்கி, அதைப்போலவே மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகையும் வழங்கலாம். இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பின் 3,500 இளைஞர்களும் - இளம்பெண்களும் பொதுப் பணிகளுக்குத் தயாராக இருப்பார்கள்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், கிராமத்தில் அரசு நிர்வாகப் பணிகளைச் செய்யவும், ஒவ்வொரு ஆண்டும் முறையான பயிற்சி பெற்ற 3,500 இளைஞர்களும் - இளம் பெண்களும் கிடைப்பதால், அரசு நிர்வாகத்தின் திறனை உயரவும், அனைத்து மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் சமமான அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகள்:

• மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்களும் - இளம்பெண்களும் பெருமளவில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. இராணுவம், ரயில்வே,மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தபால்,- தொலைபேசி துறை மற்றும் தமிழகத்திலுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களே பணியமர்த்தப்படுவதாக அறிகிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்று அஞ்சுகிறோம். அத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க, மத்திய அரசுப் பணிகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசின் அலுவலகங்களில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே பணி அமர்த்தப்படுவதால், அந்த அலுவலகங்களுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மக்கள் மொழிப் பிரச்சினையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, கூடுமானவரைத் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், தமிழில் எழுதவும்,பேசவும் தெரிந்தவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

* மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (union public service commission) ஒரு பிரிவு, தென்மாநிலங்களின் தேவைக்காகச் சென்னையில் செயல்படவேண்டும்.

• அரசு வேலைவாய்ப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு.

• தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையின்றி வெளி மாநிலத்திற்கும், வெளி நாடுகளுக்கும் இடம் பெயர்வதும், வேலைவாய்ப்பின்றித் தவிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர் குறிப்பாக, வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவது தொடர்கிறது.

• இதனைத் தவிர்க்க, தமிழக அரசுப் பணிகளிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளிலும் 74 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும் வகையில் தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x