Published : 16 Mar 2021 12:47 PM
Last Updated : 16 Mar 2021 12:47 PM
12 முறை தேர்தலில் போட்டியிட்டுவிட்டதால், அடுத்த முறை போட்டியிட்டால் 'தலைவருடன்' போட்டி வந்துவிடும் என்பதால் இளைஞர்களுக்கு வழிவிடத் திட்டமிட்டுள்ளதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக மூத்த தலைவரான துரைமுருகன் சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை களம் கண்டவர். ஏற்கெனவே 9 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் துரைமுருகன் போட்டியிட்டுள்ளார்.
10-வது முறையாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமுவை எதிர்த்துக் களம் காண்கிறார். இந்நிலையில், காட்பாடியில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நேற்று இரவு துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''12 முறை நான் சட்டப்பேரவைக்குப் போட்டியிட்டவன். எனவே, இன்னொரு முறை போட்டி போட்டால் தலைவரோடு (கருணாநிதி) போட்டி வந்துவிடும்.
ஆகையால் எனக்கு உள்ளத்தில் ஓர் எண்ணம் உண்டு. திரும்பத் திரும்ப நாமே போட்டியிடுவதா, தேர்தலில் 12, 13 முறை என்று இருப்பதா? இளைஞர்களுக்கு வழிவிட வேண்டாமா என்று நானே ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் '' என்று துரைமுருகன் தெரிவித்தார்.
நேற்று காட்பாடி தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த துரைமுருகன், ''12-வது முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றிச் செய்தால் மக்கள் நம்மை பன்னிரண்டாவது என்ன பதினைந்தாவது முறையும் ஏற்றுக்கொள்வார்கள்'' என்று கூறியிருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 13 முறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT