Published : 16 Mar 2021 11:47 AM
Last Updated : 16 Mar 2021 11:47 AM

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: புகார் அட்டை இருந்தால் நேராக முதல்வர் அறைக்கே வரலாம்: ஸ்டாலின் பேச்சு

சென்னை

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளித்த புகார்கள் 100 நாளில் தீர்க்கப்படும். ஒருவேளை யாருடைய பிரச்சினையாவது தீர்க்கப்படாமல் இருந்தால், அந்த அடையாள அட்டை இருந்தால் போதும். நேராகக் கோட்டைக்குள் வரலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. கோட்டைக்குள் மட்டுமல்ல முதல்வர் அறைக்குள் வருவதற்கான தகுதி அந்த அட்டைக்கு இருக்கிறது என்று ஸ்டாலின் பேசினார்.

திருவாரூரில் நேற்று ஸ்டாலின் பேசியதாவது:

''விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நடத்தினோம். மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் சந்தித்தோம். அதைத் தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுற்றி வந்தோம். ‘உங்கள் தொகுதி ஸ்டாலின்’ என்பது ஏதோ அழகான பெயருக்காகவோ, ஏட்டளவிலான சொல்லுக்காகவோ மட்டுமல்ல.

அந்தத் திட்டத்தின் நோக்கமே நாம் ஆட்சிப் பொறுப்பேற்று பதவியேற்ற அடுத்த நாளில் இருந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். அந்த ஒரே நோக்கத்தோடு உருவாக்கிய திட்டம்தான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அந்தத் திட்டம்.

பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டார்கள் மக்கள். திரண்ட மக்கள் கூட்டத்தை கூட்டி உட்காரவைத்து கூட்டத்தைப் பேசி அனுப்பி வைத்து விடவில்லை. ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அவர்கள் பெயர், ஊர், அவர்கள் குறைபாடுகள், தெருவிளக்கு பிரச்சினையா, சாக்கடை பிரச்சனையா, மருத்துவமனை பிரச்சினையா, பள்ளிக்கூடப் பிரச்சினையா, அதேபோல ஓய்வூதியப் பிரச்சினையா - எந்த அடிப்படைப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை அவர்கள் அங்கே பதிவு செய்து, அதற்குப் பிறகு அவர்களுக்கு வரிசை எண்ணுடன் கூடிய ஒரு அடையாள அட்டை கொடுத்திருக்கிறோம். இதில் உங்களில் பல பேர் வாங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

திமுக 234 இடங்களில் மாபெரும் வெற்றியை அடையப் போகிறது. அந்த வெற்றியின் காரணமாக நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 100 நாட்களில் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறோம்.

ஒருவேளை யாருடைய பிரச்சினையாவது தீர்க்கப்படாமல் இருந்தால், அந்த அடையாள அட்டை இருந்தால் போதும். நேராகக் கோட்டைக்குள் வரலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. கோட்டைக்குள் மட்டுமல்ல முதல்வர் அறைக்குள் வருவதற்கான தகுதி அந்த அட்டைக்கு இருக்கிறது. இதனைத் தெளிவாக நாங்கள் சொல்லி இருக்கிறோம்''.

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x