Published : 16 Mar 2021 11:25 AM
Last Updated : 16 Mar 2021 11:25 AM
பண்ருட்டி அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கட்சித் தலைமை மீண்டும் சீட் வழங்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித் தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏவான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாகக் கருதிய சத்யா பன்னீர்செல்வம், கட்சித் தலைமையிடம் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். பரிசீலிப்பதாகக் கூறி வந்த கட்சித் தலைமை, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பழனிச்சாமியை மாற்றிவிட்டு, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனது தொகுதியிலும் மாற்றம் ஏற்படும் என எண்ணியிருந்த சத்யா பன்னீர்செல்வத்துக்கு இது மேலும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் விரக்தியடைந்த அவர், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக விடைபெறும் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களது குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு பொது வாழ்விலிருந்தும் அரசியலில் இருந்தும் விடைபெறுவதாகவும், இத்தனை நாள் ஒத்துழைப்பு நல்கிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகம், மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித் தேவன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT