Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

பெரிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிட வைத்து சிறிய கட்சிகளை அழிக்கும் செயலை உயர் நீதிமன்றம் தடுக்க வேண்டும்: தாவூத் மியாகான் வலியுறுத்தல்

சென்னை

பெரிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிட வைத்து, அதன்மூலம் சிறிய கட்சிகளை அழிக்கும்செயலை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களம் இதுவரை பார்த்திராத அளவுக்கு பலமுனைப் போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது. பெரிய கட்சிகளாக கருதப்படுபவை சிறியகட்சிகளை விழுங்கும் திமிங்கிலங்களாக மாறி வருகின்றன. இதற்குகடைசி நிமிட கட்சித் தாவல்களையும், இரவல் சின்னங்களில் போட்டியிடுவதையும் பெரிய கட்சிகள் பயன்படுத்துகின்றன.

ஒரு கட்சியில் இருந்து விலகிவேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் வழி இல்லை. ஆனால், ஒரு பதிவு பெற்ற கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டே வேறு பதிவு பெற்ற கட்சி சின்னத்தில் போட்டியிடுவது மக்கள் பிரிநிதித்துவ சட்டம் 29-ஏ விதி மற்றும் தேர்தல் சின்னம் ஒழுங்காற்றுச் சட்டம் 1968 விதி 13ஏஏ (1.12.2000) அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 29-ஏ விதி அடிப்படையில் ஒரு கட்சி பதிவு பெறவேண்டுமெனில், பல பிரமாணவாக்குமூலங்களை அக்கட்சித்தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். அவற்றில் ஒன்று தன் கட்சி உறுப்பினர் வேறு கட்சியில் உறுப்பினராக இல்லை என்ற வாக்குமூலம் முக்கியமானது. அதை அனுமதித்தால் சின்னத்தை தானம் அளிக்கும் கட்சியும், இரவல் பெறும் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் பதிவை இழக்க நேரிடும் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து.

இதைப் பற்றி சிறிய, பெரிய கட்சிகளோ மற்றும் தேர்தல் ஆணையமும் கூட பாராமுகமாக இருப்பது ஜனநாயக தேர்தல் முறையை கேலிக் கூத்தாக்குகிறது.

மேலும், சின்னம் ஒழுங்காற்றுச் சட்டத்தின் விதி 13ஏஏ அடிப்படையில் ஒருவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் அக்கட்சியின் உறுப்பினர் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுவதற்கு “If and only If” என்ற வார்த்தை இருமுறை வலியுறுத்தி கூறுகிறது.

அத்துடன், அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை இருகட்சிகளில் உறுப்பினராக இருந்தால் கட்சித் தாவல் அடிப்படையில் பதவியிழப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனாலும், சிலர் உடனடி அங்கீகாரம் பெற்று கட்சியை வளர்க்க எண்ணி இந்த முடிவை எடுக்கின்றனர்.

இத்தேர்தலிலும் இச்சட்ட மீறல்களை தொடர்கின்றன. உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இத்தேர்தல் ஜனநாயகத் தேர்தலாக அமையும்.

இவ்வாறு தாவூத் மியாகான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x