Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM

அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்காக புதிய நீதிக்கட்சி பாடுபடும்: வேலூரில் ஏ.சி.சண்முகம் தகவல்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதாக, வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதியநீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். அருகில், அதிமுக வேட்பாளர்கள் அப்பு, ராமு, பரிதா உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்காதது வருத்தமாக இருந்தாலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்காக புதிய நீதிக்கட்சி பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டுபேச்சுவார்த்தை நடத்தினோம். பல்வேறு சுற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் 3 பேருக்காவது தொகுதியை ஒதுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் புதிய நீதிக்கட்சிக்கு மன வருத்தம் இருந்தது.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம். தேர்தலுக்குப் பிறகு வேளாளர் பிரச்சினை தீர்க்கப்படும் என முதல்வரும், துணை முதல்வரும் உறுதி அளித்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைய அனைத்து முதலியார்களும், வேளாளர்கள், அகமுடையார்கள் என அனைவரும் அதிமுகவுக்காக வாக்களிக்க வேண்டும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, வேலூர் தொகுதியில் எனக்கு 6 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றேன். எனவே, இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். காட்பாடி தொகுதியில் என்னை வெற்றிபெற்றவர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை, தோற்கடித்து வரலாற்று சாதனை வெற்றியை அதிமுக வேட்பாளர் பெற வேண்டும். குடியாத்தம் தொகுதியில் எனக்கு 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுக்கொடுத்த மக்கள், இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும்.

அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கிறது. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற புதிய நீதிக்கட்சி வாக்கு சேகரிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x