Published : 15 Mar 2021 10:20 PM
Last Updated : 15 Mar 2021 10:20 PM
பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவான சத்யாபன்னீர்செல்வம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டித் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக பெண் எம்எல்ஏ-வான சத்யாபன்னீர்செல்வம், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இருப்பினும் கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித்தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ-வான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னனியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாக கருதிய சத்யாபன்னீர்செல்வம், கட்சித் தலைமையிடம் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
பரிசீலிப்பதாகக் கூறிவந்த கட்சித் தலைமை, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அறிவிகப்பட்டிருந்த வேட்பாளர் பழனிச்சாமியை மாற்றிவிட்டு, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது தொகுதியிலும் மாற்றம் ஏற்படும் என எண்ணியிருந்த
சத்யாபன்னீர்செல்வத்துக்கும் மேலும் ஏமாற்றம் அளித்தது. இதனால் விரக்தியடைந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து தகவலின் உறுதித் தன்மையை அறியை சத்யா பன்னீர்செல்வத்தையும், அவரது உதவியாளர் நடராஜனையும் தொடர்பு கொண்ட போது அவர்கள் பேச முன்வரவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT