Published : 15 Mar 2021 09:28 PM
Last Updated : 15 Mar 2021 09:28 PM

நானும், ராதிகாவும் போட்டியிடவில்லை: சமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சரத்குமார் அறிவிப்பு

சென்னை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தானும், ராதிகாவும் போட்டியிடவில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய பணி உள்ளதால்,தானும் தன்னுடைய மனைவி ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் விளக்கியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சமக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

வேட்பாளார் பட்டியல் அறிவிப்புக்குப் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "சமக வேட்பாளர்கள் அனைவரும் அவர்களின் உழைப்பு, சேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார்.

மேலும், "அதிமுக, திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கின்றன. மக்கள் உழைத்து பொருட்களைப் பெற்றுக்கொள்வார்கள். எனவே, இலவசப் பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சரத்குமார் திடீரென அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். பின்னர், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

அங்கே, சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் கூட்டணியில் இணைந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 37 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x