Published : 15 Mar 2021 08:20 PM
Last Updated : 15 Mar 2021 08:20 PM
கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளரான மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடும் மகேந்திரன், இன்று(15-ம் தேதி) திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் அருகேயுள்ள, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கிருந்த சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தொழிலதிபரான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.
இவர், கடந்த 2019-ம் ஆண்டு கோவை மக்களவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், வேட்பாளராக களம் இறங்கி, வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்தார்.
தற்போது மகேந்திரன் முதல் முறையாக சிங்காநல்லுார் தொகுதியில் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடுகிறார். மகேந்திரன் தனது சொத்து மதிப்பு ரூ.160 கோடி என பிராமணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சிங்காநல்லுார் தொகுதியில் எங்கள் கட்சிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. ‘உங்களுக்குதான் எங்கள் ஓட்டு’ என மக்கள் வெற்றி நம்பிக்கை தருகின்றனர்.
இத்தொகுதியில் பலருக்கு மக்கள் வாய்ப்பு தந்துள்ளனர். ஆனால், அவர்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. மாற்றத்துக்காக வாய்ப்பு தாருங்கள் என்ற அடிப்படையில் நான் மக்களை அணுகுகிறேன். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT