Published : 15 Mar 2021 05:39 PM
Last Updated : 15 Mar 2021 05:39 PM

9-வது முறையாகக் களம் காணும் ஸ்டாலின்: தோல்வியைச் சந்தித்து பின் தொடர் வெற்றியில் பயணம் 

சென்னை

கொளத்தூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ஸ்டாலின் அவருக்கான வாய்ப்புக்காகக் கட்சியில் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து கிடைத்தும் ஆரம்பத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப் போனார். பின்னர் அடுத்த வெற்றியைத் தொடரும் முன் ஆட்சிக் கலைப்பு, மீண்டும் போட்டியிட்டு தோல்வி எனப் பல இடர்களைச் சந்தித்து தொடர் வெற்றியில் கடந்த கால் நூற்றாண்டாகப் பயணிக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் 1968-ம் ஆண்டு திமுகவுக்குள் மாணவர் அணியைத் தொடங்கி வந்தாலும் அவருக்கு உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1975-ல் மிசாவில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார் ஸ்டாலின். 1980 வரை அவருக்குக் கட்சியில் பெரிதாக பதவி எதுவும் இல்லை. 1980-ல் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. ஸ்டாலின் பொறுப்பாளரானார்.

அதன் பின்னர் அதன் செயலாளர் ஆனார். 1968-லிருந்து திமுகவுடன் தொடர்பிலிருந்தாலும் 16 ஆண்டுகள் கழித்து 1984-ல் முதன் முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் அதில் அவர் வெற்றி அடையவில்லை. அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 1989-ல் ஜா அணி, ஜெ.அணி என இரண்டாகப் பிரிந்த நிலையில், நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் நடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜீவ் காந்தி கொலை காரணமாக திமுக தோல்வியைத் தழுவியது. அதில் ஸ்டாலினும் தோல்வி அடைந்தார். பின்னர் 1996-ல் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஸ்டாலின் தோல்வியடையவே இல்லை. அதே ஆண்டு மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 2001-ம் ஆண்டு தமாகாவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை அதிமுக ஒதுக்கியது. சேகர் என்பவர் எதிர்த்து போட்டியிட்ட நிலையில் ஸ்டாலின் வென்றார். மேயராக அப்போதும் தேர்வு செய்யப்பட, இரட்டைப் பதவி இருக்கக்கூடாது என்பதால் மேயர் பதவியை விட்டு விலகினார்.

2006-ல் மீண்டும் அதிமுக ஆயிரம் விளக்கில் வேட்பாளரை நிறுத்தியது. ஆதிராஜாராம் அதிமுக சார்பில் ஆயிரம் விளக்கில் நிற்க மீண்டும் ஸ்டாலின் வென்றார். அப்போது அவர் முதன் முறையாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் ஆனார்.

2011-ம் ஆண்டு முதன்முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. ஆனாலும், ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துக் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் போட்டியிட்ட சைதை துரைசாமி தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டது. 2016-ல் மீண்டும் கொளத்தூரில் போட்டியிட்ட ஸ்டாலின் தனது தொகுதியில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.

தொகுதியில் பல திட்டங்களை நேரடியாகப் பேசி நிறைவேற்றியுள்ளார். ஸ்டாலினுக்கு முதலில் கொளத்தூர் தான் மற்றதெல்லாம் பிறகுதான் என திமுக தலைவர் கருணாநிதி சொல்லும் அளவுக்குத் தொகுதியில் கவனம் செலுத்திய ஸ்டாலின் இன்றுவரை அதில் மிகவும் கவனமாக உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் தனது தொகுதிப் பக்கம் அதிகம் கவனம் செலுத்துபவர் ஸ்டாலின் முதலிடத்தில் இருப்பார் என்றால் மிகையில்லை. பொதுவாகத் தலைவர்கள் வென்றால் அவர்கள் செல்வாக்கு காரணமாக தொகுதிப் பக்கமே செல்ல மாட்டார்கள்.

தொகுதியில் யாரையாவது பொறுப்பாளரைப் போட்டு கவனிப்பார்கள். ஆனால், ஸ்டாலின் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். ஆரம்பக் காலத்தில் தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்த ஸ்டாலின் 1996-க்குப்பின் தொடர் வெற்றியாக 6-வது முறையாகக் களம் காண்கிறார். இதில் கொளத்தூரில் 3-வது முறையாக நிற்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x