Published : 15 Mar 2021 06:05 PM
Last Updated : 15 Mar 2021 06:05 PM
இரண்டு கட்சிகளுமே சூழ்நிலையின் கைதிகள். அந்தக் காலத்தின் தேவையை நிரப்பியவர்கள் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது. இந்தக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல். இதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். 2021-ம் ஆண்டு தேர்தல் களம், எதிர்க்கட்சிகள் மீது சாடல், மநீம கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு முறை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார் கமல்.
அதிலிருந்து ஒரு பகுதி:
திராவிடக் கட்சிகளிடமிருந்து சித்தாந்த ரீதியில் வேறுபடுகிறீர்களா?
இரண்டு கட்சிகளுமே சூழ்நிலையின் கைதிகள். அந்தக் காலத்தின் தேவையை நிரப்பியவர்கள். நீதிக் கட்சிதான் இப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தக் கட்சியினர் உண்மையிலேயே பாகுபாட்டை உணர்ந்தவர்கள். அந்தக் கோணத்தை மாற்ற வேண்டும்.
திகவிலிருந்து திமுக வந்தது, அந்தக் கிளையிலிருந்து இன்னொரு கிளை உடைந்து அதிமுக ஆனது. முதல் கருத்து வேறுபாடு சித்தாந்த ரீதியாக வந்ததல்ல. ஊழலால் வந்தது. எம்ஜிஆருக்கு ஏற்பட்ட அதிருப்தி மோசமான ஊழல் காரணமாகத்தான். அது மீண்டும் இன்னும் பல கட்சிகளால் கேள்விகேட்கப்பட வேண்டும். இப்போது எங்கள் கட்சி உட்பட. தொடர்ந்து விழிப்புடன் இருப்பது ஜனநாயகத்தில் செய்ய வேண்டிய ஒன்று. அதை ஒரு குறிப்பிட்ட அமைப்பு செய்ய முடியாது. மக்கள்தான் செய்ய வேண்டும்.
திராவிட நாட்டில், இரண்டு திராவிடக் கட்சிகளை எதிர்க்கிறீர்கள். அதிமுக, திமுக என இரண்டுமே தவறு செய்வதாகப் பார்க்கிறீர்களா?
திராவிடம் என்கிற வார்த்தையையே நீதிக் கட்சிதான் முதன்முதலில் பயன்படுத்தியது. அது ஒரு மானுடவியல் ரீதியிலான வார்த்தை விளக்கம். தமிழ் பேசும், கருப்பாக இருக்கும், தடிமனான உதடுகள் இருக்கும் அனைவருமே திராவிடர்களாகிவிடுவார்கள். ஒன்றிரண்டு கட்சிகள், ஏன் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே திராவிடத்தை அடக்கிவிட முடியாது. அந்த வார்த்தையே ஒட்டுமொத்த தேசத்துக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும்.
பிராமணர்கள் - பிராமணர் அல்லாதோர் அரசியலைப் பற்றி இங்கிருக்கும் புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
இந்த பிராமணர் - பிராமணர் அல்லாதோர் அரசியல் என்பது குறுகிய வட்டத்துக்குள் இருப்பது. அது நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது. அதற்கு எந்த அதிர்வும், தொலைநோக்கும் இல்லை. நாம் எதையும் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி இங்கு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதைப் புரிந்தவர்கள்தான் வலிமையான நமது அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார்கள். அது சரியான நிலைக்கு வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அது இப்போது நடக்கிறது என நினைக்கிறேன். உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள் பிற்போக்குத்தனமான காலத்துக்கு மக்களைத் தள்ளப் பார்க்கிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற விஷயங்களை வைத்து மக்களை எளிதாக ஏமாற்ற முடியும். ஆனால், இவை மிகவும் தொன்மையானவை.
பேட்டி: ரம்யா கண்ணன், உதவ் நாயக்; தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT