Published : 15 Mar 2021 04:42 PM
Last Updated : 15 Mar 2021 04:42 PM
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்களை நாளை கட்சி மேலிடம் அறிவிக்க உள்ளது. அதேபோல் கூட்டணி தொகுதிப் பங்கீடும் இக்கூட்டணியில் இன்னும் நிறைவடையவில்லை.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்கின்றன. இக்கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த சிபிஎம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.
கூட்டணியில் தற்போது காங்கிரஸுக்கு 15, திமுக 13, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் 13 தொகுதிகளில் 12 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி முடிவாகவில்லை.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக காங்கிரஸார் பல தொகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேட்பாளர் ஆய்வுக் குழுத் தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டம் தொண்டர்கள் ரகளையால் ஞாயிற்றுக்கிழமை காலையில் தடைப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பை காங்கிரஸ் எப்போது வெளியிடும் என்று கட்சித் தரப்பில் கேட்டதற்கு, "வேட்பாளர் ஆய்வுக்குழு கூடி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 15 தொகுதிகளுக்குத் தலா 2 பேரை வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளோம். இந்தப் பட்டியல் கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுவைத் தலைவர்களுடன் வேட்பாளர் ஆய்வுக் குழு ஆலோசிக்கும். இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டனர்.
இதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்பதும், சிபிஎம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பதும் நாளை தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT