

நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி குட்டிச்சுவர் ஆகிவிட்டதாக பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸிலிருந்து விலகிய பின்பு தமிழ் மாநில காங்கிரஸ், புதுவை மக்கள் காங்கிரஸ், புதுவை முன்னேற்ற காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என 4 முறை தனிக் கட்சி தொடங்கியவர் முன்னாள் அமைச்சர் கண்ணன்.
சமீபத்தில் புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கண்ணன், அவரின் மகன் விக்னேஷ் ஆகியோர் டெல்லியில் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. அவரின் கரத்தை வலுப்படுத்த நான் கட்சியில் இணைந்துள்ளேன். நான் இந்தத் தேர்தலில் நிற்கப் போவதில்லை. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் புதுவை குட்டிச்சுவர் ஆகிவிட்டது. புதுவையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்துக்கும் சேர்த்தே இந்தக் கருத்தை நான் சொல்கிறேன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்வதேசப் பிரச்சினை. இதன் விலையை பிரதமர் மோடியால்தான் குறைக்க முடியும். சிறிய ஊரான புதுச்சேரியில் பதவி ஆசை உள்ளோரால்தான் பல குழப்பங்கள் தேர்தலின்போது ஏற்படுகின்றன. முக்கியமாக நாராயணசாமிதான் பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.