Published : 15 Mar 2021 04:13 PM
Last Updated : 15 Mar 2021 04:13 PM

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நடந்தது என்ன?- பிரேமலதா நீண்ட பதில்

சென்னை

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விரிவாகப் பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்கவுள்ளதால் இவ்வளவு இடங்கள் ஒதுக்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 23 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டுமென தேமுதிக நிர்வாகிகள் 2-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினர். தொடர்ந்து 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர்களது கோரிக்கையை அதிமுக ஏற்கவில்லை.

தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. தற்போது டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிரேமலதா விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

''நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதற்குக் காரணம் அதிமுக. தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் செய்தது அவர்கள்தான். ஆனால், பழியை எங்களின் மீது தூக்கிப் போட்டனர். ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் எங்களை அழைத்துப் பேசுவதில் தாமதம் செய்தனர். கடைசி நேரத்தில் நாங்கள் விரும்பாத 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. அதில் அதிமுக கூட்டணி தோல்வியையே தழுவியது.

இந்த முறை அவ்வாறு நடந்துவிடக் கூடாது என்று நினைத்துதான் சீக்கிரத்திலேயே பேசுமாறு கூறினோம். காலதாமதம் வேண்டாம் என்றும் தெரிவித்தோம். ஏற்கெனவே கூட்டணியில்தானே இருக்கிறோம். ஜனவரி மாதத்திலேயே தொகுதி ஒதுக்கீடு குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்று கூறினோம். ஆனால், அதை அனைவரும் கிண்டல் செய்தனர். நாங்கள் தொகுதிக்காகக் கெஞ்சுவது போன்ற தொனி ஏற்பட்டது.

பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு தேமுதிகவை அழைப்பதற்குப் பதில் பிற கட்சிகளை அழைத்துப் பேசினார்கள். ஒரே நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒரே மேசையில் வைத்துத் தொகுதிகளைப் பங்கீடு செய்யச் சொன்னோம், செய்யவில்லை. கடைசியாக எங்களை அழைத்தனர். எங்களின் குழுவும் அவர்களை அணுகிப் பேசியது.

தொகுதி, வேட்பாளர் பட்டியலை அறிவிக்கத் தொடர்ந்து காலதாமதம் ஆனது. இந்தத் தருணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் முன்கூட்டியே எச்சரித்தோம். ஆனாலும், அவர்கள் அதே தவறைத்தான் செய்தார்கள்.

4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. 40 தொகுதிகளில் ஆரம்பித்து, 25, 18 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட் என்பது வரை இறங்கி வந்தோம். ஆனால், அவர்கள் 13 தொகுதியில் இருந்து 1 தொகுதி கூட கூடுதலாகக் கொடுக்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

சரி, எந்தெந்தத் தொகுதிகளில் நாங்கள் போட்டியிடப் போகிறோம், எதை ஒதுக்கி இருக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள் என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை. குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில், தொகுதி, வேட்பாளர் பட்டியலை எங்களிடம் தெரிவிக்காததுடன், உங்களுக்கு என்ன பிரியமோ அதைச் செய்துகொள்ளுங்கள் என்று முதல்வர் பழனிசாமி எல்.கே.சுதீஷிடம் தெரிவித்தார்.

கடைசியாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூடிப் பேசினோம். அவர்கள் 13 தொகுதிகள் என்ற பங்கீட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையும் முதல்வரிடம் தெரிவித்தோம். கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்றும் கூறினோம். ஆனால், அவர்கள் செவிமடுக்கவில்லை. இதனால், தேமுதிக கனத்த இதயத்துடன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றுவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

பேச்சுவார்த்தையில் மிக மிகப் பொறுமையாக, விட்டுக்கொடுத்துப் பக்குவமாகத்தான் நடந்துகொண்டோம். ஆனால் அதிமுகவினர் எங்களைப் பக்குவம் இல்லாதவர்கள் என்கின்றனர்''.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x