Published : 15 Mar 2021 04:06 PM
Last Updated : 15 Mar 2021 04:06 PM
தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமிக்கு எதிராகப் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக சேது செல்வம் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் சலீம் இன்று வெளியிட்டார்.
அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
“புதுவைக்கு மிக முக்கியமான தேர்தலாக வரும் சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துள்ளது. முதலில் ஐந்து தொகுதிகளை அடையாளம் கண்டு 3 தொகுதிகளைப் பெற முயன்றோம். இறுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி கூட்டணியால் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலையீட்டால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரசியலில் கட்சி மாறிகள், வியாபாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. ஏழைகள், தொழிலாளர்களுக்குக் குரல் கொடுக்கும் கட்சி. நாள்தோறும் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சேது செல்வத்தை தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். மதச்சார்பற்ற கட்சிகளின் துணையோடு இம்முறை களமிறங்குகிறோம். மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை தட்டாஞ்சாவடி தொகுதியில் வென்றவர் ரங்கசாமி. அதன்பிறகு கதிர்காமம், இந்திரா நகரில் போட்டியிட்டு வென்றார். அவர் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட உள்ள சூழலில், அவரை எதிர்த்து சேது செல்வம் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT