Published : 15 Mar 2021 04:02 PM
Last Updated : 15 Mar 2021 04:02 PM
திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் என்று, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிட இன்று (மார்ச் 15) வேட்புமனுத்தாக்கல் செய்தார். முன்னதாக, காட்பாடி செங்குட்டை திரவுபதி அம்மன் கோயில் திடலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றவர், சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் துரைமுருகன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், திமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, "காட்பாடியில் பத்தாவது முறையாகப் போட்டியிடுகிறேன். இத்தனை முறை என் தொகுதி மக்களுக்குச் சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதில் பெருமைப்படுகிறேன். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன். இந்தத் தேர்தலில் வெற்றிச் சிறகடித்து வெளியே வருவோம்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் பாஜகவில் இணைந்ததை எல்லாம் 'தமாஷாக' எடுத்துக்கொள்ள வேண்டும். சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
12-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளைக் குறைவின்றிச் செய்தால் மக்கள் நம்மை 12-வது முறை என்ன, பதினைந்தாவது முறையும் ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்குத் தொண்டு செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் உள்ளே செல்ல முடியாது. ஆகவே, பதவியைப் பெரிதாகக் கருதாமல் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பார்கள். நான் அந்த வழியைப் பின்பற்றுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT