Last Updated : 15 Mar, 2021 03:39 PM

 

Published : 15 Mar 2021 03:39 PM
Last Updated : 15 Mar 2021 03:39 PM

மீண்டும் அதிமுக ஆட்சி; தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

நாட்றாம்பள்ளி

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதையொட்டி, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் இன்று தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ''ஜோலார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறேன். கூட்டணிக் கட்சி சார்பில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். குறிப்பாகப் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பத்தூர் தனி மாவட்டம் 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதேபோல, அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ, ரயில்வே மேம்பாலம், சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்துள்ளேன்.

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்கும்.

ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மல்லகுண்டா பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொழிற்பேட்டை அமையப் பாடுபடுவேன். இதன் மூலம் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு மாற்று வேட்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி மனுதாக்கல் செய்ய வந்ததைத் தொடர்ந்து அதிமுக, பாமக, பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து, உடன் வந்த கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமைச்சர் கே.சி.வீரமணி வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த உடன் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x