Published : 15 Mar 2021 03:36 PM
Last Updated : 15 Mar 2021 03:36 PM
ஆரவாரமில்லாமல் தனி ஆளாக நடந்துவந்து எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். திமுக சார்பாக அக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில் இன்று (மார்ச் 15) மதியம் 1.15 மணி அளவில் தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கத்திடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேட்பாளர் உறுதிமொழியைக் கடவுளின் பெயரால் சூளுரைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். வேட்புமனுத் தாக்கலின்போது, தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் இல்லாமல் தன் பாதுகாவலர்களுடன் மட்டும் நடந்தே வந்து முதல்வர் பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார்.
முன்னதாக, எடப்பாடி அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.
இந்தத் தொகுதியில் 7-வது முறையாகப் போட்டியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. 1989, 1991, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். 1996, 2006 ஆகிய தேர்தல்களில் அவர் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT