Published : 15 Mar 2021 02:51 PM
Last Updated : 15 Mar 2021 02:51 PM
மே 2-ம் தேதிக்குப் பின்னர் கமல்ஹாசன் நடிக்கச் வென்று விடுவார் என, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் நந்தகுமார், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணைமேயர் லீலாவதி உண்ணி ஆகியோர் உடன் இருந்தனர்.
மனுதாக்கல் செய்த பின்னர் வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இத்தொகுதியில் அதிமுக முன்னரே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன்.
கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும். 'மான்செஸ்டர்' என்று அழைக்கப்பட்டதை தாண்டி சிறப்பான நகரமாக, சர்வதேச நகரமாக கோவையை மாற்றுவோம்.
சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2-ம் தேதிக்குப் பின்னர் 'பிக் பாஸ்' அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகப் போகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது குறித்து, அதிமுக தலைவர்களுடன் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாகப் பேசுவோம். சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு தான் கிடைக்கும். கடந்த முறை சிறுபான்மை மக்கள் வாக்களித்து இருக்கின்றனர்.
என்னுடைய சொத்து மதிப்பு உயர காரணம், மூதாதையர் குடும்ப சொத்தில் பாகபிரிவினை வந்தது தான் காரணம். இதை தவிர நான் வழக்கறிஞர் என்பதால், நல்ல வழக்குகள் பல என்னிடமும், என் கணவரிடமும் இருக்கின்றது. அதனாலும் வருவாய் வருகிறது.
சமையல் கேஸ் விலை மத்திய அரசால் விரைவில் குறைக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT