Published : 15 Mar 2021 02:22 PM
Last Updated : 15 Mar 2021 02:22 PM
தொகுதிகளையும், வேட்பாளர்களையும் வெளிப்படையாக அறிவிக்காமலேயே வேட்பு மனுக்களை புதுச்சேரியின் முக்கியக் கட்சிகள் இன்று முதல் தாக்கல் செய்யத் தொடங்கின.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக அடங்கிய மதச்சார்பற்ற கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மற்றொரு இடத்தில் யாருக்கு வாய்ப்பு என்பது அறிவிக்கப்படவில்லை. இதில், திமுகவுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே, திமுக வேட்பாளர்களில் 12 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக - பாஜக கட்சிகளுக்கு தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், அதிமுகவுக்கு ஐந்து தொகுதிகளும், பாஜகவுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், வேட்புமனுத் தாக்கலில் வளர்பிறை நாளான இன்று (மார்ச் 15) பல முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர். தொகுதிகளையோ வேட்பாளர்களையோ என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, காங்கிரஸ் ஏதும் அறிவிக்காத சூழலில், பலரும் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர்.
குறிப்பாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், ஏ.கே.டி.ஆறுமுகம் இந்திரா நகர் தொகுதிக்கும், ராஜ்பவன் தொகுதிக்கு லட்சுமி நாராயணனும் மனுத்தாக்கல் செய்தனர். அதிமுகவில் முத்தியால்பேட் தொகுதிக்கு வையாபுரி மணிகண்டனும், காங்கிரஸில் அரியாங்குப்பம் தொகுதிக்கு ஜெயமூர்த்தி, மணவெளி தொகுதிக்கு அனந்தராமனும், ஏம்பலம் தொகுதிக்கு கந்தசாமியும் வேட்பாளராக அறிவிக்காமலேயே மனுத்தாக்கல் செய்தனர்.
பாஜகவில் காலாப்பட்டு தொகுதிக்கு கல்யாணசுந்தரமும், காமராஜர் தொகுதிக்கு ஜான்குமாரும் அறிவிக்காமலேயே மனுத்தாக்கல் செய்தனர்.
அதேபோல், வேட்பாளர்களை அறிவித்துள்ள திமுகவிலிருந்து வில்லியனூருக்கு சிவா, உருளையன்பேட்டைக்கு கோபால், முதலியார்பேட்டைக்கு சம்பத் உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்காமல், உருளையன்பேட்டை தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ நேரு சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT