Published : 15 Mar 2021 12:45 PM
Last Updated : 15 Mar 2021 12:45 PM

வேறு கட்சிக்குச் செல்கிறீர்களா?-விஜயதாரணி எம்எல்ஏ பதில்

வேறு கட்சிக்குச் செல்கிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு காங்கிரஸ் சீட் அறிவிக்கும்வரை பொறுத்திருங்கள் என்று விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனினும் இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகவும் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை என்றும் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் 21 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

ஏன் இன்னும் 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை?

அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்நாட்டில் மீதமுள்ள 4 தொகுதிகளில் போட்டியிடுவோர் குறித்தும் காங்கிரஸ் மத்தியக் குழு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

உங்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்று தொகுதியில் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனரே? அதனால்தான் அறிவிப்பில் தாமதமா?

எதிர்ப்பு எல்லாம் இல்லை. 2.75 லட்சம் மக்கள் இருக்கும் தொகுதியில் 10, 15 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலரின் தூண்டுதலால் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன. இதை வைத்து எந்த அரசியல் கட்சி மேலிடமும் முடிவெடுக்காது. காங்கிரஸ் கட்சி சரியான முடிவெடுக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல.

நீங்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறதே, வேறு கட்சிக்குச் செல்ல உள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறதே, எது உண்மை?

நீங்களே வதந்தி என்று கூறிவிட்டீர்கள். வதந்தியை என்றும் நம்பக்கூடாது என்று மக்களுக்குத் தெரியும். கட்சி சீட் அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள். தொகுதி மக்களோடு இணைந்து செயல்பட்டிருக்கிறேன். மக்களுக்காகச் சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறேன். சட்டப்பேரவையில் தனியொரு பெண்ணாக என்னை வெளியேற்றி இருக்கின்றனர்.

கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி உள்ளேன். 10 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ நான்தான். எதிர்க் கட்சியில் இருந்தும்கூட ரூ.1,200 கோடி நிதியுதவியைப் பெற்றிருக்கிறேன். கட்சி என்னை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x