Published : 15 Mar 2021 12:18 PM
Last Updated : 15 Mar 2021 12:18 PM
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ இன்று காலை தேர்தல் காரியாலத்தைத் திறந்து வைத்தார். பின்னர் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கிருந்து திறந்த வேனில் நின்றவாறு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 3-வது முறையாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2016 முதல் தற்போது வரை அமைச்சராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எண்ணற்ற அரசின் சாதனைத் திட்டங்களைத் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன். மக்களும் என்னுடன் உள்ளனர். நானும் மக்களுடன்தான் இருக்கிறேன். இது ஒன்றே எனக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது.
முழு நேர அரசியலையும் மக்கள் பணியையும் மையப்படுத்தியே இந்தத் தொகுதியில் நான் பணியாற்றி உள்ளேன். இந்த முறை எனது வெற்றி வாய்ப்பு என்பது அனைவரும் டெபாசிட் இழக்கக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பான வெற்றியாக இருக்கும்.
மக்கள் கோரிக்கை வைப்பதை இலவசம் என்று சொல்ல முடியாது. டிடிவி தினகரன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பெரியகுளம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அவர் மக்களுக்கு எதுவும் வழங்கியது இல்லையா. மக்களுக்கு வழங்கியது எப்படி இலவசம் என்று கூற முடியும். மக்களுக்கு எது இல்லையோ அதை வழங்க வேண்டியது நல்ல அரசின் கடமை. அந்தக் கடமையை நாங்கள் செய்கிறோம். மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது அதிமுகவின் கொள்கை.
பயனுள்ள திட்டங்களைத்தான் வழங்குகிறோம். இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டால், அடுத்த முறை யாரும் எதுவும் அறிவிக்கக்கூடிய தேவையில்லாத நிலை வந்துவிடும். அப்படி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையைக் குறை கூறுபவர்களுக்கு, நேற்றே ஜூரம் வந்துவிட்டது. தேர்தல் அறிக்கையைப் பார்த்தவுடன் அதிமுகதான் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். யார் ஆட்சிக்கு வரமுடியும் என்று மக்களுக்குத் தெரியும். அதிமுக சொன்னால் கருத்தாக மக்கள் எடுத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் கூறினால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. அதிமுக 100 சதவீத வெற்றியைப் பெற்றுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் குறை சொல்கின்றனர். தேர்தல் ஆணையம் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை நான் சந்திப்பேன்.
3-வது முறையாக வெற்றி பெற்றால், இங்கு தொழிற் பூங்காவை அமைப்பேன். கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்குவேன். தாமிரபரணி - வைப்பாறு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் பம்பை - வைப்பாறு இணைப்பதற்குப் பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதைப் பெற்றுத்தரும்போது கோவில்பட்டி வளம் கொழிக்கும் பூமியாக பெறும் நிலையை உருவாக்கித் தருவேன்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT