Published : 15 Mar 2021 10:24 AM
Last Updated : 15 Mar 2021 10:24 AM

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று மனுத்தாக்கல்

சென்னை

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய இரண்டாம் நாளான இன்று முகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் போட்டி போட்டு மனுதாக்கல் செய்கின்றனர். முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், டிடிவி தினகரன், கமல், சீமான் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏப்.6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே.2-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12 அன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 19 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்புமனுத் தாக்கல் இல்லை என அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடைமுறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நேரடி வேட்புமனுத் தாக்கலுக்கு தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி, வேட்பாளருடன் இரண்டு வாகனங்கள் வர அனுமதி, இருவர் மட்டுமே உடனிருக்க அனுமதி எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதிகள் பங்கீடு செய்து பங்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவித்து அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி முடிய 15 நாட்கள் இடையில் அவகாசம் இருந்தது. இதில் பெரும்பாலான கட்சிகள் அனைத்துப் பணிகளையும் முடித்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. எஞ்சியிருந்த தேமுதிகவும் நேற்று அறிவித்துவிட்டது.

இந்நிலையில் வேட்புமனு ஆரம்பித்த 2-ம் நாள் இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிமுக, திமுக, மநீம, அமமுக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்கின்றனர். எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி இன்று நண்பகல் 12 மணி அளவில் அங்கு மனுத்தாக்கல் செய்கிறார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின் அயனாவரம் மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்.

கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் காலையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில் மதியம் அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று அங்கு மனுத்தாக்கல் செய்கிறார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். முன்னாள மேயர் சைதை துரைசாமி, மா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் சைதாப்பேட்டை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

இதேபோல் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பெரும்பாலான கட்சியினர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x