Published : 15 Mar 2021 03:11 AM
Last Updated : 15 Mar 2021 03:11 AM
தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்யும் ‘சரல் பென்ஷன்’ திட்டம் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
அரசு ஊழியர்கள்போல, தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிபவர்களும் தங்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிப்பதற்காக, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), ‘சரல் பென்ஷன் யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.1,000 பிரீமியம் செலுத்த வேண்டும். இத்தொகையை மாதம்தோறும், மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை என செலுத்தலாம். இதுதவிர, ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமும் உள்ளது.
அதிகபட்சமாக எவ்வளவு தொகையும் செலுத்தலாம். அதற்கேற்ப ஓய்வூதியமும் அதிகம் கிடைக்கும். 40 முதல் 80 வயதுக்குள் இருப்பவர்கள் இதில் சேரலாம். இத்திட்டம் 2 வகைகளைக் கொண்டது. முதல் திட்டத்தின்படி, ஒருவரது ஓய்வுக் காலத்துக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும். அவரது மறைவுக்குப் பிறகு மொத்த தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.
இரண்டாவது திட்டத்தின் கீழ், காப்பீடுதாரர், நாமினி இருவரும் இறக்கும் பட்சத்தில், அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்த 6 மாதத்துக்குள் சரண்டர் செய்து ஓய்வூதியத் தொகையை பெற முடியும்.
இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட முதலீட்டுத் தொகைக்கு ஓய்வூதியம் பெறும் காலம் வரை முழுவதும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு ஒருவருக்கு வேறு எந்தவித வருமானமும் இல்லை என்றால், எந்த வரியும் இல்லாமல் முழு தொகையும் ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த சரல் பென்ஷன் யோஜனா திட்டம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT