Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

கோவை தெற்கு தொகுதியில் போட்டுயிடுவது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டுயிடுவது ஏன் என்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ரம்யா கண்ணன் மற்றும் உத்தவ்நாயக் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

இடது மற்றும் வலது கொள்கைகளுக்கும் தனி தன்மைகள் இருக்கின்றன. அதே சமயம் அவற்றை பற்றிய விமர்சனங்களும் உள்ளன. நாங்கள் இரண்டுக்கும் மையமான ஒரு சித்தாந்தத்தை முன்வைக்கிறோம். இந்த சிந்தாந்தம் உலக அரசியலில் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்ற ஒன்று தான்.

திராவிடன் என்ற வார்த்தையை முதலில் நீதிக்கட்சி பயன்படுத்தியது. இது ஒரு மானுடவியல் வர்ணணையாகும். கருப்பு நிறம் மற்றும் தடித்த உதட்டுடன் தமிழ் பேசுகிற நம்மை போன்ற எல்லோருமே திராவிடன் என்று சொல்லி கொள்கிற தகுதி உள்ளவர்கள் தான். திராவிடத்தை 2,3 கட்சிகள் அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதாக மட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். அது நாடு முழுமைக்கும் பொருந்தும்.

மக்கள் நீதி மய்யம் மூன்றாம் அணியா என்று கேட்டால் இதை முதல் அணி என்றே சொல்வேன். கைவசம் இருக்கும் கணக்குகளையும் புள்ளிவிவரங்களையும் வைத்து கொண்டு இதை மூன்றாவது அணி என்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையும் எங்களுடைய செயல் திறனையும் வைத்து பார்க்கும் போது நாங்கள் தான் முதல் அணி.

நான் 2021-லேயே முதல்வர் ஆகிவிட நினைக்கிறேனா என்று கேட்டால், நான் நீண்ட கால தொலைநோக்குடன் இருக்கின்றேன் என்று தான் சொல்வேன். இல்லையென்றால், இந்த கட்சியையே தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே இருக்கின்ற வேறோரு கட்சியில் சேர்ந்திருக்கலாம்.

நாங்கள் எங்களுக்கு என்று தனி சின்னத்தையும் ஒரு சித்தாந்தத்தையும் கொண்டு வந்துள்ளோம். இது குறைந்தது அடுத்த நூறாண்டுக்கும் நீடிக்கும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தான் மோசமான அரசியல்வாதிகளால் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று நினைத்தேன்.

என்னுடைய உறவினர்களும், நான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் தொகுதிக்கு நான் சென்றிருந்தால் அது எனக்கு பாதுகாப்பாகவும், மிக எளிமையான கணக்காகவும் இருந்திருக்கும். அதுமட்டுமன்றி, கோவை தெற்கு தொகுதியில் தேசிய கட்சிகளால் தூண்டப்பட்டு சமூக நல்லிணக்கம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களே அங்கு போட்டியிடவும் செய்கிறார்கள். அதனால் இது தான் எனக்கு நேரடி சவால்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x