Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி) உள்ளிட்ட 59 பேர் மனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மனுத் தாக்கல் நடக்கவில்லை.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. ஆளும் அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை முழுமையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் 21, பாஜக17, மக்கள் நீதி மய்யம் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இன்று (திங்கள்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் முக்கியதலைவர்கள் உட்பட அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்றிரவு அவர் சேலம் புறப்பட்டுச் சென்றார்.
வேட்புனு தாக்கல் செய்ததும் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளியில் பகல் 3 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பிறகு திருவாரூர் செல்லும் ஸ்டாலின் இன்று மாலை தெற்கு ரத வீதியில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கோவை பேங்க் சாலையில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று பகல் 1.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று மாலையே தொகுதியில் பிரச்சாரத்தையும் தொடங்குகிறார். இவர்கள் தவிர, அமைச்சர்கள், முக்கிய வேட்பாளர்கள் பலரும் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். 20-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெற 22-ம் தேதி கடைசி நாள். முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT