Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM
காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரி, கரோனா சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகள் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தடுப்பதற்கான வாகன சோதனையில் ஈடுபடுவதற்காக 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராக (சிறு சேமிப்பு) பணிபுரிந்து வரும் பாலாஜி, பறக்கும் படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில், உடல் நிலை பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கரோனா தொற்று சிகிச்சை பிரிவில் மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என குடும்பத்தினர் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் ‘நான் என்ன செய்ய முடியும்’ என தேர்தல் நடத்தும் அலுவலர் அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பாலாஜி மன வேதனையுடன், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதலங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி கூறும்போது, ``பறக்கும் படையில் பணிபுரிந்து வந்த பாலாஜி காய்ச்சல் எனக்கூறி 2 நாட்கள் பணிக்கு வரவில்லை. குழுவில் உள்ள மற்ற பணியாளர்களோ உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக, வட்டார வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி கூறும்போது, "சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT