Last Updated : 14 Mar, 2021 05:53 PM

1  

Published : 14 Mar 2021 05:53 PM
Last Updated : 14 Mar 2021 05:53 PM

ப.குமார் - மகேஷ் பொய்யாமொழி: மா.செ.க்களின் நேரடிப் போட்டியால் சூடுபிடிக்கும் திருவெறும்பூர் தொகுதி

மகேஷ் பொய்யாமொழி, ப.குமார்

திருச்சி

அதிமுக, திமுக மாவட்டச் செயலாளர்களின் நேரடிப் போட்டியால் திருவெறும்பூர் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி விளங்குகிறது. நகர்ப்புறமும், ஊரகப் பகுதிகளும் கலந்து காணப்படும் இத்தொகுதியில் 1,43,229 ஆண்கள், 1,48,609 பெண்கள், 53 திருநங்கைகள் என 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர்.

மீண்டும் வேட்பாளரான மகேஷ்

கடந்த தேர்தலில் இங்கு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றார். அதன்பின் இத்தொகுதியை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்டத் திமுகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் எனக் கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

30 ஆண்டு கால வரலாறு மாறுமா?

அதிமுக சார்பில் இத்தொகுதியின் வேட்பாளராக ஏற்கெனவே 2 முறை திருச்சி எம்.பி.யாக இருந்தவரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறைகூட அதிமுக இங்கு நேரடியாக வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்ற போதிலும், அதற்கடுத்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வன் தோல்வியடைந்தார். எனவே, இந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் வகையில், இம்முறை இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றுக் காட்டுவோம் எனக்கூறி ப.குமாரும், அதிமுகவினர் முழுவீச்சில் செயல்பட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் தொகுதி

அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவருமே அந்தந்தக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் என்பதாலும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் என்பதாலும், திருச்சி மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் திருவெறும்பூரில்தான் வெற்றிக்குக் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதற்கேற்ப ஆளுங்கட்சியினரிடத்தில் தாராள பணப்புழக்கம் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், பொன்மலை பகுதியில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இத்தேர்தலில் ஆளும்கட்சியினர் எடுக்கும் 'ஆயுதத்துக்கு' நாமும் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைவிட நாம் சிறப்பாகச் செய்வோம்' என்றார். இதனால் அதிமுகவினரைப் போல, திமுகவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுஒருபுறமிருக்க மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரான அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான முருகானந்தம், அமமுக வேட்பாளரான கலைச்செல்வன் உள்ளிட்டோரும் இத்தொகுதியில் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால் திருவெறும்பூர் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x