Published : 14 Mar 2021 05:41 PM
Last Updated : 14 Mar 2021 05:41 PM
அரசியலில் எதுவும் நடக்கலாம் அதிலும் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பது பாஜக தேர்தல் பட்டியலில் இன்று உறுதியாகியுள்ளது. காலையில் கட்சியில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு மாலையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் போராட்டம் நடத்தியும் தலைமை கண்டுக்கொள்ளவில்லை.
பாஜக அதிமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே பரபரப்பு எதிர்ப்பார்ப்பும் நிலவியது. மற்றக்கட்சிகள் தொகுதிகளை வாங்கிவிட்டு தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவார்கள் ஆனால் பாஜகவில் பிரமுகர்களை முடிவு செய்துவிட்டு தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியானது.
சென்னையில் சேப்பாக்கத்தில் குஷ்பு, மயிலாப்பூரில் கருநாகராஜன், ஆலந்தூரில் கே.டி ராகவன், தி.நகரில் எச்.ராஜா, கிணத்துக்கடவு தொகுதியில் அண்ணாமலை, மதுரை வடக்கில் சீனிவாசன், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, துறைமுகத்தில் வினோஜ் பி. செல்வம், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், ராஜபாளையத்தில் கவுதமி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், விருகம்பாக்கத்தில் பெப்சி சிவா, திருவண்ணாமலை தணிகைவேல், திட்டக்குடியில் தடா பெரிய சாமி என பொறுப்பாளரை நியமித்திருந்தனர். ராசிபுரத்தில் முருகன் போட்டியிடுவார், ஆயிரம் விளக்கு கேட்கப்படும் அதில் கு.க.செல்வம் போட்டியிடுவார் என்றெல்லாம் தகவல் வெளியானது.
தொகுதி பொறுப்பாளர்களுக்காக அத்தொகுதியை கேட்டுப்பெற்று அங்கு போட்டியிடுவார்கள் என தகவல் வெளியானது. ஆனால் அதிமுக தங்களுக்கு செல்வாக்கான பல தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால் பாஜக கேட்ட பல தொகுதிகள் கிடைக்கவில்லை. சென்னையில் ஆயிரம் விளக்கு மற்றும் துறைமுகம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதிக்கு பதில் அரவக்குறிச்சி ஒதுக்கப்பட்டது. மயிலாப்பூர், சேப்பாக்கம், ஆலந்தூர், தி.நகர், விருகை, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட பல தொகுதிகள் கொடுக்கப்படவில்லை.
இதனால் குஷ்பு, கே.டி.ராகவன், கரு.நாகராஜன், பெப்சி சிவா, கவுதமி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசப்பட்டது. ஆனால் இன்று பட்டியல் வெளியானது, அதில் ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம் போட்டியிடுவார் என்கிற நிலையில் அங்கு குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு கிடைக்காததால் அத்தொகுதி பொறுப்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சியில் நிற்கிறார். மதுரை வடக்கு, கோவை தெற்கு, திருவண்ணாமலை, திட்டக்குடி, துறைமுகம், நெல்லை தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்தது. அதில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அங்கு வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். ராசிபுரத்துக்கு பதில் தாராபுரத்தில் எல்.முருகனும், தி.நகர் கிடைக்காததால் காரைக்குடியில் எச்.ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
இதில் மதுரை வடக்கு தொகுதியின் பொறுப்பாளர் பேராசிரியர் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலையில் அவருக்குப் பதில் திமுகவில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவில் இன்று இணைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளியானவுடன் அந்த தொகுதியில் உள்ள பாஜகவினர் சரவணனுக்கு சீட்டை ஒதுக்கக்கூடாது என போராட்டம் நடத்தினர். ஆனால் மாலையில் வெளியான பட்டியலில் அவருக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பட்டியல் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் வைத்து இறுதிப்படுத்தப்பட்டதால் அதற்கு முன்னரே தொகுதி உறுதியானதை உறுதிப்படுத்திக்கொண்டு காலையில் பாஜகவில் இணைந்துள்ளார் சரவணன்.
குஷ்பு, கவுதமி இருவரும் தொகுதி பறிபோன நிலையில் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கள் பணி தொடரும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இதில் குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கவுதமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT