Published : 14 Mar 2021 05:19 PM
Last Updated : 14 Mar 2021 05:19 PM
பிரபலங்களுக்கு பாஜகவில் இணைந்த உடனே சீட் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன், திமுக திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு வழங்காமல் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் இன்று காலை மீண்டும் பாஜகவுக்குத் தாவினார். அவருக்கு பாஜக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் பற்றியும் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
’’ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வத்துக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?
ஆயிரம் விளக்கு எம்எல்ஏவான கு.க.செல்வம் தற்போது தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதால் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் கட்சியில் காலையில்தான் இணைந்தார். அவருக்குப் பாஜகவில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதே?
சரவணன் நேற்றே ஆன்லைன் மூலம் கட்சியில் இணைந்துவிட்டார். எங்களின் கட்சியில் யாரும் ஆன்லைன் மூலம் உறுப்பினர் ஆகலாம். இன்று ஊடகங்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அவரின் பலம், மருத்துவப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சரவணன் அப்பகுதியின் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எங்கள் கட்சிக்காரர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். பாஜகவினர் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர்கள். ஓரிருவர் தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் அதை உடனடியாக விலக்கிக் கொண்டார்கள்.
அண்மையில் கட்சியில் இணைந்த குஷ்பு, டாக்டர் சரவணன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதே, கட்சியில் நெடுங்காலமாக உழைத்தவர்களுக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?
கட்சியில் உழைத்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி பழமையானவர். ஜன சங்க காலத்தில் இருந்து இருப்பவர். குஷ்பு சினிமாத் துறையைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். அதனால் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் எந்தச் சோர்வையும் ஏற்படுத்தாது. அவர்கள் கொள்கை அடிப்படையில்தான் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.
வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில்தான் நடந்திருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, ஏக மனதாக வேட்பாளர்களைத் தலைமைக்குப் பரிந்துரை செய்தோம்.
தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்?
மக்களிடம் கருத்துக் கேட்பதற்காகக் குழு அமைத்திருக்கிறோம். அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மக்களின் குரலாக எங்களின் தேர்தல் அறிக்கை மார்ச் 21-ம் தேதி ஒலிக்கும். 18-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளேன்’’.
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT