Published : 14 Mar 2021 01:46 PM
Last Updated : 14 Mar 2021 01:46 PM
கட்சித் தலைமை மீது குற்றம் சாட்டியுள்ள கரூர் எம்.பி. ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் காங்கிஸார் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் காங்கிரஸ் தலைமை மீது குற்றம் சாட்டியுள்ள கரூர் எம்.பி. செ.ஜோதிமணியைக் கண்டித்து காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் கரூர் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள காந்தி சிலை முன் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 14) நடைபெற்றது.
இதுகுறித்து பேங்க் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:
’’கரூர் எம்.பி. ஜோதிமணி தமிழகக் காங்கிரஸ் தலைமையைக் களங்கப்படுத்தும் வகையில் பணம் வாங்கிக் கொண்டு தொகுதிகளை ஒதுக்கி, வேட்பாளர்களைத் தேர்வு செய்து உள்ளதாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டசமூக வலைதளங்களில் அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயக முறைப்படிதான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவருக்கு வேண்டியவர்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதால் தலைவர்கள் மற்றும் குழுவினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே 441 என மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கரூரில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேபோல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்காசி உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கட்சி கேட்டது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டப்பேரவைத் தொகுதி கூட ஜோதிமணி தலையீட்டால் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படவில்லை.
இதனை மறைக்கும் விதமாகக் கட்சித் தலைமை மீது ஜோதிமணி குற்றம்சாட்டி வருகிறார். தன்னை நிரபராதியாகக் காட்டிக்கொள்ள கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். கரூர் மாவட்டத்தில் தன்னை தவிர யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற தன் சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜோதிமணி இவ்வாறு செயல்படுகிறார்’’.
இவ்வாறு பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT