Published : 14 Mar 2021 11:17 AM
Last Updated : 14 Mar 2021 11:17 AM
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று (மார்ச் 14) தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழாவுக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் இருந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் உட்பட அதிமுக வேட்பாளர்களின் படங்களை தேர்தல் அலுவலர்கள் நீக்கினர்.
அறந்தாங்கியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரது இல்ல காதணி விழா அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வரவேற்கும் விதமாக இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து (திருமயம்), மு.ராஜநாயகம் (அறந்தாங்கி) இவர்களுடன் எம்எல்ஏ ரத்தினசபாபதி உள்ளிட்டோர் படங்களுடன் மண்டபம் வாசலில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் சென்று காதணி விழா நடத்தும் குடும்பத்தினரை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, பேனரில் இருந்த படங்களையும் அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT