Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் 1996 முதல் போட்டியிட்டு அடுத்தடுத்து நடந்த ஐந்து தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று கடந்த 25 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக வைத்துள்ளார் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் தொகுதி என்றுமே திமுகவின் பக்கம்தான் எனும் அளவுக்கு தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளது. 1996-ம் ஆண்டு முதன்முதலில் திமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டார் விவசாய குடும்பத்தை சேர்ந்த அர.சக்கரபாணி. அன்று தொடங்கிய அவரின் வெற்றிப்பயணம் கடந்த ஐந்து தேர்தல்களாக தொடர்கிறது.
1996-ம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்துவை எதிர்த்து வெற்றி பெற்றார். இதையடுத்து 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற, அதில் ஒருவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.டி.செல்லச்சாமியை எதிர்த்து வெற்றிபெற்றார் அர.சக்கரபாணி. 2006-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட நல்லசாமியை எதிர்த்து வென்றார். இவரது தொடர் வெற்றியைக் கண்ட திமுக தலைமை இவருக்கு அரசு கொறடா பதவி வழங்கியது.
2011-ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தோற்கடித்தார். 2016-ல் அதிமுகவை சேர்ந்த கிட்டுச்சாமியை வென்றார். இந்த தேர்தலில் இவர் 65727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இரண்டாவது இடம் பிடித்தார். ‘சக்கரபாணியை போல் நமது எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் இருந்துவிட்டால் நிரந்தமாக நமது ஆட்சிதான்’ என திமுக தலைவர் கருணாநிதியே பாராட்டியதாக கூறுவதும் உண்டு. அந்த அளவிற்கு தொகுதி மக்களுடன் ஈடுபாட்டுடன் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், திமுக கொறடாவாகவும் கட்சி பொறுப்பில் உள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் நடக்கும் தனக்கு அழைப்பு வரும் சாதாரண மக்களின் வீட்டு விசேஷங்களுக்கு கூட இவர் ஆஜராகிவிடுவார். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர் மீது நன்மதிப்பு வைத்துள்ளனர். தொகுதியில் துக்க நிகழ்ச்சி குறித்து தகவல் கிடைத்தால் அவர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்துவிட்டுவருவார். தொகுதி மக்களின் நல்லது கெட்டது என குடும்ப நிகழ்வுகளிலும் பங்கேற்று மக்களின் மனதில் இடம்பிடித்து வைத்துள்ளார்.
ஆளுங்கட்சியாக இருந்தபோது தேவத்தூர் உள்ளிட்ட கிராமப்புற மக்களின் வறட்சியை போக்க நல்லதங்காள் நீர்த்தேக்க திட்டம் கொண்டு வந்தார். கிராமப்புற சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலை வசதிகள் செய்துகொடுத்தார். பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக்கப்பட்டது, வாகரை பகுதியில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். ஒட்டன்சத்திரம் மக்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தமாக தீர்க்க திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர பொள்ளாச்சி பரப்பிகுளம் ஆழியாறு அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு முதற்கட்டமாக ஆய்வுப்பணிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் இவருக்கு உள்ளது என்கின்றனர் திமுக நிர்வாகிகள். நடைபெறவுள்ள 2021 பொதுத்தேர்தலிலும் அர.சக்கரபாணி போட்டியிடவுள்ளார். சென்னையில் வேட்பாளர் நேர்காணலுக்கு சென்றுவந்தவர், அடுத்தநாளே தேர்தல் அலுவலகம் திறக்க ஏற்பாடுகளை துவக்கிவிட்டு கிராமம் கிராமமாக சென்று வேன் பிரச்சாரத்தை தொடக்கி விட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த எம்.எல்.ஏ.ஆண்டி அம்பலம் நத்தம் தொகுதியில் 1977 முதல் 1999 வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்ற 22 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை புரிந்தார்.
இவரது சாதனையை, தற்போது ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்துமுறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து அர.சக்கரபாணி முறியடித்துள்ளார். இம்முறையும் இவரை எதிர்த்து அதிமுக போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. விடாமுயற்சியாக ஆறாவது முறையாக அதிமுக கட்சித்தலைமை ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் நடராஜனை இவரை எதிர்த்து போட்டியிட களம் இறக்கியுள்ளது.
ஐந்து நபர்களை எதிர்த்து வெற்றிகொண்டு தற்போது அதிமுகவின் ஆறாவது வேட்பாளரை எதிர்கொள்கிறார், ஒட்டன்சத்திரம் தொகுதியை கால் நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக வைத்துள்ள தனி ஒருவரான அர.சக்கரபாணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT