Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
ஆத்தூர் தொகுதியில் வாக்கு வங்கி இல்லாத பாமக (2016 தேர்தலில் வாங்கிய மொத்த ஓட்டு 617) ஐந்துமுறை இந்த தொகுதியில் வெற்றிபெற்ற திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரிய சாமியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது அதிமுக, பா.ஜ. கட்சியினர் கொடுக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கடந்த 2016 பொதுத் தேர்தலில் முக்கிய தொகுதியாக விளங்கியது, காரணம் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுக சார்பிலும், அப்போதைய அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் அதிமுக சார்பிலும் நேரடியாக களம் கண்டனர்.
ஐ.பெரியசாமியை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நத்தம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவந்த நத்தம் ஆர்.விசுவநாதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆத்தூர் தொகுதியில் போட்டியிடச் செய்தார். இதனால் கடந்த தேர்தலில் இந்த தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முடிவில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி பலம், அதிமுகவினரின் முழு உழைப்பு என அனைத்தையும் தொகுதியில் பிரயோகித்துப் பார்த்தும் தொகுதியை கைப்பற்ற முடியவில்லை. ஆத்தூர் தொகுதியில் அதிமுக தோல்வியை தழுவியதோடு, தொடர்ந்து வெற்றி பெற்ற நத்தம் தொகுதியில் புதிய வேட்பாளரை நிறுத்தியதால் அந்த தொகுதியையும் திமுகவிடம் இழந்தது அதிமுக.
இந்நிலையில் இந்தமுறை நத்தம் ஆர்.விசுவநாதன் தனது பழைய தொகுதியிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அவருக்கு நத்தம் தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆத்தூர் தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என அதிமுக தலைமை ஆராய்ந்து வந்தது.
நத்தம் ஆர்.விசுவநாதனை விட ஒரு வலுவான வேட்பாளரை ஆத்தூர் தொகுதியில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிடச் செய்ய சாத்திய மில்லாத நிலையில் இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்தது. ஏற்கனவே ஒருமுறை அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கியி ருந்ததால் இந்தமுறை தேமுதிகவிற்கு ஒதுக்க முடிவு செய்தது. இந்நிலையில் தேமுதிக கூட்ட ணியை விட்டு வெளியேறியதால் இந்த தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கிவிட்டது.
கடந்த மக்களவை தேர்தலில் பாமக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டதால் இதன் சின்னம் ஆத்தூர் தொகுதியில் பரவலாக மக்கள் அறிந்திருப்பர் எனக் காரணம் கூறி ஆத்தூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது இங்கு சிவகாசியை சேர்ந்த திலகபாமா களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக தொகுதிக்கு வந்து முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவது என பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக இரண்டாம் இடம்பிடிக்க, தேமுதிக மூன்றாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி நான்காவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி ஐந்தாவது இடத்தையும் பிடித்தது. தனித்துப் போட்டியிட்டு ஆறாவது இடத்தை பிடித்த பாமக வாங்கிய வாக்குகள் மொத்தம் 671 மட்டுமே. அதிமுக, பா.ஜ.க.வாக்குகள் பாமக வேட்பாளருக்கு முழுமையாக கைகொடுத்தால் மட்டுமே திமுகவிற்கு நிகராக போட்டியில் நிற்க முடியும் என்ற நிலை. ஐந்து முறை ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது பாமக என்பது அதிமுக, பா.ஜ. கட்சியினரின் ஒத்துழைப்பை பொறுத்தே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT