Published : 13 Mar 2021 11:02 PM
Last Updated : 13 Mar 2021 11:02 PM
ரஜினி அரசியலில் எதிர் களத்திலாவது நின்றிருக்கலாம் என்று நிகழ்ச்சி ஒன்றில் கமல் தெரிவித்துள்ளார்.
ரஜினி - கமல் இருவருமே நெருங்கிய நண்பர்கள். இதனை பல்வேறு திரையுலக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் களத்தில் இருவருமே இடையே போட்டி என்ற நிலை உருவானது. ரஜினி கட்சித் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். ஆனால், திடீரென்று உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டதால் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டு ஒதுங்கிவிட்டார்.
தற்போதைய அரசியல் களத்தில் கமல் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இதில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் ரஜினியை வீட்டில் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினார் கமல். அப்போது அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடினார் கமல். அப்போது அவரிடம் ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது:
"அரசியலுக்கு வராதது ரஜினியின் தனிப்பட்ட முடிவு. அவர் ஆரோக்கியமாக இருந்திருந்து அரசியல் களம் கண்டிருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். என்னோடு கூட்டணி அமைக்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர் களத்தில் நின்றிருந்தால் கூட போதும், அதிலும் ஒரு நன்மை இருந்திருக்கும்"
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT